கிள்ளான் லிட்டல் இந்தியா தீபாவளி அலங்கார விளக்குகளால் களை கட்டியது!
- Muthu Kumar
- 15 Oct, 2025
(எஸ்.எஸ்.மணிமாறன்)
கிள்ளான், அக்.15-
தீபாவளி அலங்கார விளக்குகள் வண்ணம் மின்னும் அழகான அமைப்புகளுடன் பலரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கிள்ளான் லிட்டல் இந்தியா தெங்கு கிளானா தீபாவளி தோரண வாயிலை, கிள்ளான் டத்தோ பண்டார் டத்தோ ஹாஜி அப்துல் ஹமீட் ஹூசேன் அதிகாரப் பூர்வமாகத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரமுகர்கள் பொதுமக்களுக்கு அவர் தீபத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். நாட்டின் மத நல்லிணக்கம், சகோதரத்துவம், ஒருமைப்பாடு எனும் மனித நேய பண்புகளுடன் திறந்த இல்ல தீபத்திருநாள் உபசரிப்புகளுடன் திருநாளை அனுசரிப்போர், விழா ஏற்பாட்டாளர்கள் சிறந்த முறையில் வழி நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
வண்ணம் மின்னும் விளக்குகள் சுடர்வது போன்று அனைவரது நெஞ்சத்திலும் அன்பெனும் தீபமேற்றி திருநாள் காலங்களில் பொறுமையைக் கடைப்பிடித்து அவரவர் குடும்பத்தில் நேசத்தையும் பாசத்தையும் மிளிர வகை செய்யும் ஒரு சிறந்த நாளாக தீபாவளி அமைந்துள்ளதாக டத்தோ பண்டார் அப்துல் ஹமீட் தமது வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.
அனைத்து இன மக்களும் கருத்து வேறுபாடின்றி திருநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்று தங்களது கருத்து வேறுபாடுகளை
மறந்து அன்பை ஒருவருக்கொருவர் பகிர்ந்து பரிமாறிக் கொள்ளும்படி அவர் ஆலோசனை கூறினார்.
மனித வள மக்கள் நலப்பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ், அழைக்கப்பட்ட பிரமுகர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



