மலேசிய விளையாட்டுத் துறைசார் பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டம்!
- Muthu Kumar
- 03 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 2-
மலேசிய அரசு, உள்ளூர் விளையாட்டுத் துறையைப் புதிய பொருளாதார வளர்ச்சி ஆதாரமாக மாற்றுவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொள்ள உள்ளது. இதற்காக விளையாட்டுத் தொழிலுக்கான ஆதரவான சூழலை உருவாக்குவது, நிதி உதவி, சிறந்த ஊக்கத்தொகைகளை வழங்குவது உள்ளிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும், 'மலேசியாவில் தயாரிக்கப்பட்ட' விளையாட்டு பொருட்களை உலகள சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
பதின்மூன்றாவது மலேசிய திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஆராய்ச்சி, மேம்பாடு, வணிகமயமாக்கல், புத்தாக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த விளையாட்டு பொருட்கள், சேவைகளின் மேம்பாடு அதிகரிக்கப்படும்.
நாடாளுமன்றத்தில் 'மறுவடிவமைப்பு மேம்பாடு' என்ற கருப்பொருளுடன் பதின்மூன்றாவது மலேசிய திட்டத்தைத் தாக்கல் செய்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், 2027ஆம் ஆண்டு மலேசியா தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு புரவலராக இருக்கும் என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல அனைத்துலக விளையாட்டு போட்டிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த முயற்சிகள் மலேசியாவை விளையாட்டுத் துறையில் முன்னணி நாடாக மாற்றுவதற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.உள்ளூர் விளையாட்டுப் பொருட்கள் உலக அளவில் அங்கீகாரம் பெறுவதுடன், பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்கும்.
இந்தத் திட்டங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, விளையாட்டுத் தொழிலில் புதுமைகளை ஊக்குவிக்கும். மலேசியாவின் விளையாட்டு சூழல் உலக அரங்கில் பிரகாசிக்க இந்த முன்முயற்சிகள் முக்கிய பங்காற்றும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



