4 வாகனங்கள் விபத்தில் மூத்த தம்பதியர் மரணம்!
- Muthu Kumar
- 30 Oct, 2025
சிரம்பான், அக்.30-
சிரம்பானுக்குச் செல்லும் சிரம்பான்-போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையின் 11.5ஆவது கி.மீட்டரில் நிகழ்ந்த 4 வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் மூத்த தம்பதியர் மரணமுற்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.50 மணிக்கு நிகழ்ந்த இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 60 வயது மதிக்கத்தக்க இவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டது உறுதிப்படுத்தப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநிலத் தீயணைப்பு மீட்புத் துறையின் பேச்சாளர் தெரிவித்தார்.
ஹோண்டா ஏடிவி350 ரக மோட்டார் சைக்கிள், நிஸ்ஸான் ரக வேன் (1), தொயோத்தா விஷ் கார் (1), புரோட்டோன் பெர்டானா கார் (1) ஆகியவை சம்பந்தப்பட்ட விபத்தாகும்.இச்சம்பவம் தொடர்பில் இரவு 8.52 மணிக்குப் புகார் பெறப்பட்டதும் போர்ட்டிக்சன் தீயணைப்பு நிலையத்திலிருந்து 1 தீயணைப்புக் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டது.
சம்பவ இடத்தை அடைந்ததும் இது 4 வாகனங்களை உட்படுத்திய விபத்து என்று கண்டுபிடிக்கப்பட்டது.மோட்டார் சைக்கிளில் வந்த 65 வயதுடைய ஒரு முதியவரும் 67 வயதுடைய அவரின் மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதை மருத்துவ குழுவினர் உறுதிசெய்தனர்.
இவர்களின் சடலங்கள் மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.இச்சம்பவத்தில் தொயோத்தா விஷ் காரில் பயணித்த 20 வயது மதிக்கத்தக்க இந்தோனேசிய ஆடவருக்குச் சொற்பக் காயங்கள் ஏற்பட்டதில் மேல் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.இதில் புரோட்டோன் பெர்டானா மற்றும் வேன் ஓட்டுநருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று செய்தியாளர்களிடம் பேசிய போது அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



