ஆசியான் தலைமைத்துவ பொறுப்பு பிலிப்பைன்ஸிடம் ஒப்படைப்பு!
- Muthu Kumar
- 29 Oct, 2025
கோலாலம்பூர், அக். 29 -
அடுத்த ஆசியான் தலைமைத்துவ பொறுப்பு பிலிப்பைன்ஸ்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டில் பிலிப்பைன்ஸ் ஆசியான் தலைவராக செயல்படும். இப்பொறுப்பு ஒப்படைப்பைக் குறிக்கும் ஆசியான் தலைமைத்துவ செங்கோலை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிடமிருந்து பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜேஆர் நேற்று செவ்வாய்க்கிழமை பெற்றுக் கொண்டார்.
வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பிலிப்பைன்ஸ் அதிகாரப்பூர்வமாக ஆசியான் தலைவராக இருக்கும். இப்பொறுப்பை ஒப்படைக்கும் வைபவம் மற்றும் சடங்கு முறையை காண்பது ஒரு கௌரவ நிகழ்வாக இருக்கிறது என்று அன்வார் தெரிவித்தார்.
"தீவிரமான மற்றும் அறிவூட்டும் பரிமாற்றங்களுக்காக ஆசியான் தலைவர்களை இங்கு வரவேற்பது ஒரு பாக்கியமாக இருந்தது என்று கோலாலம்பூரில் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த, 47ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அதன் தொடர்பிலான உச்சநிலை மாநாடுகளின் நிறைவு விழாவில் பேசியபோது அன்வார் குறிப்பிட்டார்.
"அனைத்து ஆசியான் உறுப்பு நாடுகளுக்கும். நமது கலந்துரையாடல் பங்காளிகளுக்கும், ஆசியான் செயலகத்திற்கும் அவர்களின் விடாமுயற்சி, பொறுமை மற்றும் ஒத்துழைப்புக்கும் நான் நன்றி கூறுகிறேன் என்று அன்வார் தெரிவித்தார்.
கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கிற்கு
அருகிலுள்ள கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடந்த இப்பொறுப்பு ஒப்படைப்பு சடங்கின்போது, பிலிப்பைன்ஸ் ஆசியான் தலைமைத்துவத்திற்கான அதிகாரப்பூர்வ சின்னம் மற்றும் "நமது எதிர்காலத்தை ஒன்றாக வழிநடத்துதல் என்ற கருப்பொருளையும் மார்க்கோஸ் வெளியிட்டார்.மலேசியாவின் ஆசியான் தலைமைத்துவத்தை மிகவும் பாராட்டிய மார்க்கோஸ், ஆசியான் குழுவை மலேசியா தெளிவுடனும் உறுதியுடனும் வழிநடத்தியது என்றார்.
"நடைமுறைவாதத்துடன் தொலைநோக்குப் பார்வை பொருந்தும்போது, ஆசியான் மிகப் பெரிய முன்னேற்றங்களைச் செய்கிறது என்பதை நீங்கள் எங்களுக்குக் காட்டியுள்ளீர்கள். "உங்கள் தலைமைத்துவப் பதவி முடிவடையும் நிலையில், 2026ஆம் ஆண்டில் ஆசியானை வழிநடத்தும் பொறுப்பை பிலிப்பைன்ஸ் ஏற்றுக் கொள்வதில் பெருமை கொள்கிறது" என்று மார்க்கோஸ் தெரிவித்தார்.
செழிப்பு வழித் தடங்களை வலுப்படுத்தி மக்களின் அதிகாரமளிப்பை முன்னேற்றும் அதே வேளையில், ஆசியானின் அமைதி மற்றும் பாதுகாப்பு அஸ்திவாரங்களை பிலிப்பைன்ஸ் தொடர்ந்து வலுப்படுத்தும் என்று மார்கோஸ் தெரிவித்தார்.தீவு நாட்டின் தலைமைப் பதவி, நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (டிஏசி) நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவோடு ஒத்துப்போகும் என்று, அவர் குறிப்பிட்டார்.
கடந்த 1976ஆம் ஆண்டில் கையொப்பமிடப்பட்ட டிஏசி, ஆசியானின் முக்கிய அமைதி மற்றும் நட்பு ஒப்பந்தமாக செயல்படுகிறது. பரஸ்பர மரியாதை மற்றும் சர்ச்சைகளை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது ஆகிய கொள்கைகளுக்கு உறுதியளிக்கிறது.டிஏசியில் தற்போது 58 கையொப்பமிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன. 47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாடு மற்றும் தொடர்புடைய உச்சநிலை மாநாடுகளுக்கு முன்பு, கடந்த சனிக்கிழமை கையெழுத்திட்ட பிறகு பின்லாந்து அதில் உறுப்பினரானது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



