நாடாளுமன்ற வளாகத்தில் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்த எம்.பி.க்களுக்கு தடை
- Surendran Sumdraraj
- 17 Jul, 2026
புதுடெல்லி, ஜூலை 17-
நாடாளுமன்ற வளாகத்திற்குள் எம்.பி.க்கள் ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடி மற்றும் கேமரா பொருத்தப்பட்ட பேனா உள்ளிட்ட அதிநவீன சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது என மக்களவைச் செயலகம் அறிவுறுத்தியுள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனா உள்ளிட்ட சில மின்னணுச் சாதனங்கள் ஒலி மற்றும் காட்சிகளைப் பதிவு செய்யும் வசதியைக் கொண்டுள்ளதால், அவை எம்.பி.க்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கும் நாடாளுமன்றத்தின் தனியுரிமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாடாளுமன்ற வளாகத்துக்குள் இத்தகைய சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நாடாளுமன்ற நுழைவு வாயில்களுக்கு முன்பு போராட்டம் நடத்துவதால் மற்ற எம்.பி.க்களின் நடமாட்டம் பாதிக்கப்படக்கூடும் என்பதால், தர்ணா, போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



