கான்கிரீட் கலவை லாரியுடன் மோதியதில் கூலிமில் 17 வயது மாணவர் உயிரிழப்பு

top-news

செய்தி -தி. கிரிஷன்

கூலிம், டிச, 6 – 
ஜாலான் லுனாஸ்–பண்டார் பெர்மாத்தா லுனாஸ் சாலையில் நடந்த துயரமான சாலை விபத்தில், 17 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்தார். அவர் நண்பருடன் பயணித்த மோட்டார் சைக்கிள் திடீரென கான்கிரீட் கலவை லாரியுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது. மற்றொரு மாணவருக்குக் கை, கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

கூலிம் மாவட்ட துணை காவல் துறைத் தலைவர், துணை கண்காணிப்பாளர் “தெங்கு முகமது பைசல் தெங்கு யெங்” தெரிவித்ததாவது, உயிரிழந்தவரும் காயமடைந்தவரும் 17 வயதுடையவர்கள் என்றும் பாடாங் செராய் இடைநிலைப்பள்ளியில் பயின்று வந்த மாணவர்கள் என்றும் கூறினார். 

விபத்துக்கான தகவல் மாலை 4.15 மணிக்குத் தமக்கு  கிடைத்ததாகவும்,  யமஹா லஜெண்டா 100 மோட்டாரும் கான்கிரீட் கலவை லாரியும் மோதியது ஆரம்பகட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

“பெக்கான் லுனாஸில் இருந்து தாமான் லஜெண்டாவை நோக்கி ஒரே திசையில் சென்ற இரு மாணவர்களும், பிற்பகல் 3.45 மணியளவில் விபத்தில் சிக்கியுள்ளனர். பெனாந்தி திசையில் வந்த லாரியை 36 வயதுடைய ஓட்டுநர் கட்டுமானப்பகுதியை நோக்கிச் செலுத்தியிருந்தார்,” என்றார் அவர்.

லாரி  கட்டுமானப் பகுதியில் இடது திசைக்குத் திரும்பியது. இந்நேரத்தில், லாரியின் இடது பக்கத்திற்குப் பின்னால் மிக அருகில் பயணித்த மாணவர்கள், திடீர் திருப்பத்தைத் தவிர்க்க முடியாமல் லாரியின் இடது புறத்தில் மோதியதால் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விபத்தில் மோட்டார் ஓட்டிய மாணவர் தலையிலும் உடலிலும்  ஏற்பட்ட கடுமையான காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு மாணவர் வலது கை, கால் பகுதிகளில் காயமடைந்தார் . லாரி ஓட்டுநருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.

இவ்வழக்கு சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 (ஏபிஜே) பிரிவு 41(1)ன் கீழ் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *