6 பேர் உயிரிழந்த விபத்து: லோரி ஓட்டுநரை காவலில் வைக்க போலீஸ் கோரிக்கை நிராகரிப்பு
- Surendran Sumdraraj
- 08 Jun, 2026
சுங்கை பட்டாணி, ஜூன் 6 –
கெடா மாநிலம் கம்போங் பாரு பினாங் துங்கால் பகுதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட லோரி ஓட்டுநரை காவலில் வைத்து விசாரிக்க போலீசார் செய்த கோரிக்கையை சுங்கை பட்டாணி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
49 வயதுடைய லோரி ஓட்டுநர் விபத்து நடந்த உடனேயே போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள அவரை நீதிமன்றக் காவலில் வைக்க அனுமதி கோரி போலீசார் இன்று நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் முகமட் அஸ்லான் பஸ்ரி, போலீசாரின் காவல் கோரிக்கையை ஏற்க மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்தார். எனினும், நீதிமன்றத்தின் இந்த முடிவுக்கான விரிவான காரணங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
நேற்று இடம்பெற்ற அந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் இருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாகனத்தின் தொழில்நுட்ப நிலை, சாலை சூழ்நிலை மற்றும் ஓட்டுநரின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



