வெளிநாட்டு தாதியர்களின் நியமனத்தை கருத்தில் கொள்ள தயார் - சுகாதார அமைச்சு

top-news

செய்தி- வெற்றி மைந்தன்

கோலாலம்பூர், நவ. 11-

பொது மருத்துவமனைகளில் கடுமையான பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, வெளிநாட்டு தாதிகளை நியமிக்கும் வாய்ப்பை மலேசிய சுகாதார அமைச்சு கருத்தில் கொள்ள தயாராக உள்ளது. ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ கோரிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்று அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிப்லி அஹ்மத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வாய்மொழி கேள்வி நேரத்தில் பேசிய அவர், நாங்கள் வெளிநாட்டு தாதியர்களை அனுமதிக்கும் முயற்சியை நிராகரிக்கவில்லை. ஆனால், அவர்களின் மருத்துவ திறன், தகுதி, பாதுகாப்பு, திறமை, கலாச்சாரம், மொழி தொடர்பான அம்சங்களை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். இவை அனைத்தும் தரத்தை உறுதிப்படுத்துவதற்கு அவசியம் என்றார்.

மலேசியாவில் சுகாதாரத் துறையில் குறிப்பாக தாதியர்கள், மருத்துவர்களின் பற்றாக்குறை கடுமையான சவாலாக உள்ளது. 2025ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து, சிங்கப்பூர் போன்ற அயல்நாடுகள் மலேசிய சுகாதார பணியாளர்களை ஈர்க்கும் படலம் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாதியர் பதவிகள் காலியாக உள்ளன.

இந்த முடிவு, சுகாதார சேவைகளின் தரத்தை பாதுகாக்கும் அதே வேளையில், உள்ளூர் பணியாளர்களின் நலனையும் கருத்தில் கொள்கிறது. அமைச்சு, இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ விண்ணப்பம் வந்தால் மட்டுமே விரைந்து செயலாற்றப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *