ஜேஏசி கூட்டக் குறிப்புகள் கசிவு: போலீஸ் புகார் செய்யப்பட்டது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 14-

அண்மைய நீதித்துறை பதவி நியமன ஆணையத்தின் (ஜேஏசி) கூட்டம் தொடர்பான குறிப்புகள் வெளியே கசிந்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது என்று அரசாங்கப் பேச்சாளர் ஃபாமி பாட்ஸில் நேற்று தெரிவித்தார்.

அக்கூட்டக் குறிப்புகளைப் பொதுமக்கள் குறிப்பாக தகவல் ஊடகங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டாமென்றும் அவர் அறிவுறுத்தினார். அந்த விவகாரம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது என்று என்னிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சமூக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் அந்த ஆவணம் உண்மையானதா இல்லையா என்பதை என்னால் உறுதிப்படுத்த இயலவில்லை என்று ஃபாமி சொன்னார். அது உண்மையான ஆவணம் என்றால் அது அதிகாரத்துவ ரகசியக் காப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாகும். அதனால், சம்பந்தப்பட்டவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றார்.

கோலாலம்பூரில் அங்காசபுரியில் உள்ள துன் அப்துல் ரசாக் ஒளிபரப்பு மற்றும் தகவல் கழகத்தில் நிகழ்ச்சியொன்றைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது தொடர்புத்துறை அமைச்சருமான ஃபாமி கூறினார்.வெளியே கசிந்துள்ள கூட்டக் குறிப்புகளை சமூக ஊடகத் தளங்களிலிருந்து அகற்றிவிடும்படி உத்தரவிடும் அதிகாரம் மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திற்கு இருந்த போதிலும், அத்தகவல்கள் சமூக ஊடகத் தளங்களின் கொள்கைகளை மீறியதாக உள்ளதா என்பதை முதலில் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது என்றும் ஃபாமி சுட்டிக் காட்டினார்.

மே மாதம் நடைபெற்ற நீதித்துறை பதவி நியமன ஆணையத்தின் கூட்டக் குறிப்புகள் எனக் கூறப்படும் ஆணையமொன்று நேற்றுமுன்தினம் சமூக ஊடகத்தில் வெளியானது. இது பல்வேறு தரப்புகளின் அதிருப்திக்கு உள்ளாகி உள்ளது.அந்த ஆவணம் சமூக ஊடகத்திற்கு கசிய விடப்பட்டிருப்பதைக் கண்டு தாம் அதிர்ச்சியடைந்ததாக பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் குறிப்பிட்டுள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *