அமெரிக்காவே இன்னும் எங்களை தான் நம்பி இருக்கு - விளாடிமிர் புதின்!

top-news
FREE WEBSITE AD

இந்தியா ரஷ்யா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வந்துள்ளார். இதற்கிடையே அமெரிக்கா இன்னும் தங்களிடம் இருந்து எரிபொருளை வாங்குவதாகக் குறிப்பிட்ட புதின், அப்படியிருக்கும்போது இந்தியா மட்டும் எரிபொருளை வாங்கக்கூடாது எனச் சொல்வதை ஏற்க முடியாது என புதின் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அரங்கில் எப்போதும் இந்தியாவுக்கு ஒரு நல்ல நண்பராக ரஷ்யா இருந்து வந்துள்ளது. இதற்கிடையே இந்தியா ரஷ்யா இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் புதின் நேற்றைய தினம் டெல்லி வந்தார். உக்ரைன் மோதல் தொடங்கிய பிறகு, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு புதின் இந்தியா வருவது இதுவே முதல்முறை.

அவரை பிரதமர் மோடி நேரில் விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார். வழக்கமாக உலக தலைவர்கள் வரும்போது மூத்த அமைச்சர்களே அவர்களை வரவேற்பார்கள். அப்படி இருக்கும்போது பிரதமர் மோடி நேரடியாக ஏர்போர்ட் சென்று புதினை கட்டித்தழுவி வரவேற்றார். இருவரும், ஒரே காரில் பயணித்தனர். பிரதமர் இல்லத்தில் புதினுக்கு இரவு விருந்தும் அளிக்கப்பட்டது. இன்றைய தினம் நடைபெறும் உச்சி மாநாட்டில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே அமெரிக்கா இரட்டை நிலைப்பாட்டை எடுப்பதாகச் சொல்லி புதின் கடுமையாகச் சாடினார். இன்னுமே அமெரிக்கா தனது அணு ஆலைகளுக்குத் தேவையான யுரேனியம் எரிபொருளை ரஷ்யாவிடம் இருந்தே வாங்குவதாகக் குறிப்பிட்ட புதின், அப்படியிருக்கும் இந்தியா மட்டும் தனது கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் வாங்கக்கூடாது என அழுத்தம் கொடுப்பது சரியல்ல என குற்றம்சாட்டினார். அமெரிக்காவுக்கு இருக்கும் அதே உரிமை இந்தியாவுக்கும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதின் மேலும் கூறுகையில், "அமெரிக்காவிற்கு எங்களிடமிருந்து எரிபொருள் வாங்கும் உரிமை இருக்கும்போது, இந்தியாவுக்கு அத்தகைய உரிமை ஏன் மறுக்கப்பட வேண்டும்? அதிபர் டிரம்ப்புடன் இதை விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ரஷ்யா- இந்தியா எரிசக்தி உறவு எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என புதின் உறுதிப்படத் தெரிவித்தார். மேலும், "எரிசக்தி தொடர்பாக இந்தியா ரஷ்யா உறவு வலுவாகவே இருக்கிறது. இந்தத் தற்காலிக அரசியல் அழுத்தங்கள் அல்லது உக்ரைனில் நடந்த நிகழ்வுகளால் இந்தியா ரஷ்யா உறவு பாதிக்கப்படவில்லை" என்று அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *