பாஸ் கட்சியுடன் ம.இ.கா & ம.சீ.ச இணைவதே ஒரே தீர்வு!
- Thinagaren Sanggaren
- 07 Aug, 2025
ஆகஸ்ட் 7,
ஒற்றுமை கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரிசானால் ம.இ.காவும் ம.சீ.சவும் ஒதுக்கப்படுவதாக அவர்கள் உணர்ந்தால் பாஸ் கட்சியுடன் இணைந்து அரசியல் களத்தில் போராடுவதே ம.இ.காவுக்கும் ம.சீ.சவுக்குமான சிறந்த எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என முன்னாள் சட்டத்துறை அமைச்சரான டத்தோ சைட் இப்ராஹிம் தெரிவித்தார். பாரிசானில் அதன் கூட்டணிக் கட்சிகள் ஓரங்கட்டப்படுகிறதா எனும் கேள்வி அர்த்தமற்றது. பாரிசான் தோற்றுவிக்கப்பட்ட 1973லிரிந்தே அதன் முதன்மை கூட்டணிக் கட்சிகளாக ம.இ.கா, ம.சீ.ச எனும் இரு கட்சிகளையும் பாரிசான் எப்போதுமே அங்கீகரித்ததில்லை. தேர்தல் கூட்டணியாகவும் ஆட்சியில் குறைந்தபட்ச அங்கீகாரமே பாரிசான் வழங்கியிருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக ம.இ.காவும் ம.சீ.சவும் பாரிசான் கொடுப்பதை மட்டுமே பெற்று வந்தனர். ஆனால் நஜீப்பின் காலத்தில் மட்டுமே ம.இ.காவுக்கும் ம.சீ.சவுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அதிகாரப் பங்களிப்பும் வழங்கப்பட்டது. ம.இ.காவும் ம.சீ.சவும் நஜீப் காலத்தில் வழங்கப்பட்ட அதிகாரத்தைச் சரியாகத் திட்டமிட்டு பயன்படுத்தியிருந்தால் இழந்த அவர்கள் சமூகத்தின் ஆதரவை மீண்டும் பெற்றிருக்க முடியும் என டத்தோ சைட் இப்ராஹிம் மேற்கொள்காட்டினார்.
இப்போது காலம் கடந்து விட்டது. பாரிசானில் நீடிப்பதால் ம.இ.காவுக்கும் ம.சீ.சவுக்கும் பின்னடைவு மட்டுமே மிஞ்சும். இரு கட்சிகளும் மீண்டும் அவர்களின் சமூகத்தின் ஆதரவைப் பெற அடிமட்டத்திலிருந்து கட்சியை மீண்டும் கட்டமைக்க வேண்டும். சமூகத்தின் நம்பிக்கையை மீண்டும் பெற ம.இ.காவும் , ம.சீ.சவும் அதிகாரத்துவம் வாய்ந்த நிலையில் இருக்க வேண்டும். பாரிசானுடன் இருந்தால் அதிகாரம் இல்லாத சாதாரணக் கட்சியாக மட்டுமே இருக்க முடியும் என டத்தோ சைட் இப்ராஹிம் நினைவூட்டினார்.
பாரிசானுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. தாமதிக்காமல் ம.இ.காவும் , ம.சீ.சவும் அதற்கான இறுதி வாய்ப்பாக, பாரிசானுடனான கூட்டணி சமரசங்களை மீளாக்கம் செய்ய வேண்டும். பாரிசானின் தலைமை பொறுப்புகளை அம்னோ மட்டுமே அலங்கரித்து வருகிறது. பாரிசானின் தலைமை பொறுப்புகளில் ம.இ.காவும் , ம.சீ.சவும் இடம்பெறுவதுடன் பாரிசானின் முடிவை ம.இ.காவும் , ம.சீ.சவும் சேர்ந்து எடுக்க வேண்டும். இந்த அடிப்படை கட்டமைப்பைப் பாரிசானில் கட்டமைக்க முடியவில்லை என்றால் பாரிசானுடன் ம.இ.காவும் , ம.சீ.சவும் கூட்டணியில் இருந்து எந்தவொரு பயனும் இல்லை.
அரசியல் எதிரிகளான பாஸ் கட்சியுடனும் பெர்சத்துவுடனும் குறைந்தபட்ச அதிகாரத்தில் ம.இ.காவும் , ம.சீ.சவும் இணைந்திடலாம் என டத்தோ சைட் இப்ராஹிம் தெரிவித்தார். ம.இ.காவும் ம.சீ.சவும் அதன் சொந்த சமூகத்தை நம்பி மட்டுமே அரசியல் செய்து வருகிறது. இந்தியர்களும் சீனர்களும் அரசாங்கத்திலிருந்து செய்ய வேண்டியதை ம.இ.காவும் ம.சீ.சவும் முழுமையாகச் செய்யவில்லை எனும் கோபத்திலேயே பல்லினக் கட்சிகளான டி.ஏ.பியையும் பி.கே.ஆரையும் ஆதரித்தனர். இந்த நேரத்தில் பாரிசானின் கட்டுப்பாட்டில் இருந்ததால் தன் சமூகத்திற்குச் செய்ய வேண்டியதை முழுமையாகச் செய்ய முடியவில்லை என்பதை வெளிப்படையாக அறிவித்து ம.இ.காவும் ம.சீ.சவும் பாரிசானிலிருந்து வெளியேறினால் இழந்த தன் சமூகத்தின் ஆதரவை ம.இ.காவும் ம.சீ.சவும் மீண்டும் பெற அதிக வாய்ப்புகள் இருப்பதை டத்தோ சைட் இப்ராஹிம் ம.இ.காவுக்கும் ம.சீ.சவுக்கும் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



