நஜிப்பின் வீட்டுக் காவல் உத்தரவை உடனடியாக அமல்படுத்துக-அம்னோ இளைஞர் பகுதி வலியுறுத்தல்!
- Muthu Kumar
- 14 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 14-
அம்னோ தலைவர் நஜிப் ரசாக் எஞ்சியிருக்கும் தமது சிறைக் காலத்தை வீட்டுக் காவலில் கழிக்கக் கோரும் அரச உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அக்கட்சியின் இளைஞர் பகுதி வலியுறுத்தியுள்ளது.
எனவே, முன்னாள் பிரதமரான நஜிப் தமது எஞ்சிய சிறைத்தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்க வேண்டும். இனியும் சாக்குபோக்கு கூறிக்கொண்டிருக்கக் கூடாது என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் அது குறிப்பிட்டுள்ளது.
ஏற்கெனவே நாங்கள் அறிவித்திருந்தபடி, அரச உத்தரவை அரசாங்கம் அமலாக்க மறுப்பது முடியாட்சியை அவமதிப்பதாகும். நாட்டின் அரசமைப்புச் சட்டத்திற்கு ஓர் ஆதாரக் கல்லாக விளங்கி வருவது முடியாட்சி ஆகும் என்று அது குறிப்பிட்டது.
அரசு உத்தரவு ஆவணம் இருப்பதை சட்டத்துறைத் தலைவர் டுசுக்கி மொக்தார் புதன்கிழமையன்று கூட்டரசு நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். அது அசல் உத்தரவு ஆவணமா அல்லது செல்லத்தக்கதா என்பது குறித்து சர்ச்சை நிலவி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்தாண்டு ஜனவரி 29ஆம் தேதியிட்ட அந்த
உத்தரவை அரசாங்கம் அமல்படுத்த வேண்டும் என்று நஜிப் வலியுறுத்தி வருகிறார். எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட நஜிப் தற்போது காஜாங் சிறைச்சாலையில் அத்தண்டனையை அனுபவித்து வருகிறார்.
அக்குற்றத்திற்காக அவருக்குப் பன்னிரண்டுகள் சிறைத்தண்டனையும் இருபத்தோரு கோடி வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கூட்டரசு மன்னிப்பு வாரியத்திடம் முறையிட்டதைத் தொடர்ந்து கடந்தாண்டு பிப்ரவரியின் முற்பகுதியில் அவரின் சிறைத்தண்டனை ஆறு ஆண்டுகளாகவும் அபராதத் தொகை ஐந்து கோடி வெள்ளியாகவும் குறைக்கப்பட்டது. அவ்வேளையில், தமது எஞ்சிய சிறைத்தண்டனைக் காலத்தை வீட்டிலேயே கழிப்பதற்கு முன்னாள் பேரரசர் அப்துல்லா அமாட் ஷா உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



