லஞ்சப் பணத்தில் நகைக் கடை-'குடிநுழைவு தம்பதியினர்' எம்ஏசிசியிடம் வசமாக சிக்கினர்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 14-

லஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி நகைக் கடை ஒன்றைத் திறந்ததாகக் கூறப்பட்ட, குடிநுழைவு இலாகாவில் பணி புரியும் ஒரு தம்பதியினர். மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்திடம் பக்கம் (எம்ஏசிசி) வசமாக சிக்கிக் கொண்டனர்.

நாற்பது வயதுடைய அந்த கணவன்-மனைவி குடிநுழைவு இலாகா அதிகாரிகள், தாங்கள் லஞ்சமாகப் பெற்றதாக நம்பப்படும் பணத்தில் ஆறு லட்சம் வெள்ளியைக் கொண்டு ஒரு நகைக் கடையைத் திறந்ததாகவும் அதன் தொடர்பில் விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாகவும் எம்ஏசிசி துணைத் தலைமை ஆணையர் (நடவடிக்கை) அஹ்மாட் குசாய்ரி யஹ்யா தெரிவித்தார்.

முறையான ஆவணங்களை கொண்டிருக்காத அந்நிய நாட்டுத் தொழிலாளர்களுக்கான வேலை பர்மெட்டுகளின் விண்ணப்பத்தை துரிதப்படுத்தியதன் வழி, கடந்த 2020 முதல் 2024ஆம் ஆண்டுக்கிடையில் அவர்கள் இருவரும் சட்டவிரோதமாக லஞ்சம் பெற்றதாகக் கூறப்பட்டது.

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் அவர்கள் இருவரும் சுமார் 9 லட்சம் வெள்ளியை லஞ்சமாகப் பெற்றதாகவும் அதன் பின்னர் வர்த்தகத்தைப் பதிவு செய்வதற்காக குடும்ப உறுப்பினர்களை பினாமிகளாகப் பயன்படுத்தியதன் மூலம் ஒரு நகைக் கடையைத் திறந்ததாகவும் நம்பப்படுவதாக, குசாய்ரி தெரிவித்தார்.

ஒரு சொகுசு காரையும் அவர்கள் வாங்கியிருப்பதாகக் கூறிய அவர், பகாங்கில் ஒரு நகைக் கடையில் சோதனையை மேற்கொண்டபோது அங்கு 14 லட்சம் வெள்ளி மதிப்புள்ள சுமார் 3 கிலோ தங்கம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதாக, நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் எம்ஏசிசி கூறியது.

முறையான ஆவணங்களைக் கொண்டிருக்காத அந்நியத் தொழிலாளர்கள் சட்டப்பூர்வ வேலை/பர்மெட்டுகளைப்பெற அனுமதிக்கும் தொழிலாளர் மறுசேர்ப்புத் திட்டத்தில் அந்த இரண்டு சந்தேகப்பேர்வழிகளும் சம்பந்தப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.

ஆவணங்களை சரிபார்ப்பதற்காக தங்களின் தொழிலாளர்களின் கோப்புகளை அவ்விருவரிடமும் சமர்ப்பிக்குமாறு முதலாளிமார்கள் கோரப்பட்டதாகவும் அவற்றை ஏழு நாட்களுக்கு பதிலாக மூன்றே நாட்களில் சரிபார்ப்பதற்காக அவர்களுக்கு ஒரு தொழிலாளிக்கு 700 வெள்ளி லஞ்சமாக வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

அக்கோப்புகளை கையாளும் இதர அதிகாரிகள் மத்தியில் பகிர்ந்து கொள்ளப்பட்ட பின்னர், இந்த தம்பதியினர் ஒரு தொழிலாளிக்கு 150 வெள்ளியைப் பெற்றதாகவும் நம்பப்படுகிறது.இதன் தொடர்பிலான விசாரணைக்கு உதவுவதற்காக, அவர்கள் இருவரும் ஐந்து நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *