காலணி, தேசியக் கொடி விவகாரங்களில் அரசியல் நடத்தும் அம்னோ இளைஞர் பிரிவு -இப்ராஹிம் அலி சாடல்!
- Muthu Kumar
- 20 Aug, 2025
கோலாலம்பூர், ஆக 20-
மலிவான அரசியலை நடத்திக் கொண்டிருக்கும் அம்னோ இளைஞர் பிரிவு, நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கும் மிகப் பெரிய லஞ்ச ஊழல் விவகாரங்களுக்கு எதிராக குரல் கொடுக்க தைரியம் இல்லாத ஓர் அரசியல் பிரிவாக செயல்பட்டு வருகிறது.
"பாதுகாப்பு என்ற போர்வையில் காலணி மற்றும் தேசியக் கொடி பிரச்சினைகளில் மூக்கை நுழைத்துக் கொண்டு தன்னை ஒரு ஹீரோவாக காட்டிக் கொள்ள அப்பிரிவு முயல்கிறது என்று. புத்ரா எனப்படும் மலேசிய பெர்காசா பூமிபுத்ரா கட்சித் தலைவர் இப்ராஹிம் அலி வன்மையாகச் சாடியிருக்கின்றார்.
முந்தைய அம்னோ தலைவர்கள் கையாண்ட தைரியப் போக்கை, அக்மால் சாலே தலைமையிலான அம்னோ இளைஞர் பிரிவு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். "அரசாங்கத்தின் நேர்மை, லஞ்ச ஊழல், நீதி, மக்களின் பொருளாதாரம் போன்ற பெரிய விவகாரங்கள் குறித்து குரல் கொடுப்பதிலிருந்து விலகி அம்னோ இளைஞர் பிரிவினர் மௌனமாக இருந்து வருகின்றனர்.
அம்னோ இளைஞர் பிரிவினர் உண்மையில் கவனம் செலுத்த வேண்டிய பல முக்கியமான விவகாரங்களை இப்ராஹிம் சுட்டிக் காட்டினார்.
ஒரு கப்பல் கூட இன்னும் கட்டி முடிக்கப்படாத மற்றும் அரசியல் சுறாக்கள், அல்லது அதில் சம்பந்தப்பட்ட சிலர் தங்களின் வயிற்றை நிரப்பி இருக்கும் 1,100 கோடி வெள்ளி மதிப்புலான எல்சிஎஸ் ஊழல்.
நீதிமன்றம் முடிவு செய்துள்ள போதிலும் இன்னமும் மறுக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற ராணுவத்தினருக்கான 170 கோடி வெள்ளி ஓய்வூதியப் பணம்.
"ஜனநாயகத்தை கொலை செய்யும்" லஞ்ச ஊழல், குடும்ப உறுப்பினர்களுக்குச் சலுகை மற்றும் அதிகார துஷ்பிரயோகம்.
*மக்களின் பொருளாதாரம் நசுக்கப்பட்டுள்ளது. சம்பளம் உயரவில்லை, வரிகள் அதிகரித்து வருகின்றன.
மக்கள் சிரமத்தில் இருக்கும்போது, "திடீர் கோடீஸ்வரராகி இருக்கும்" ஃபர்ஹாஷ் வஃபா சல்வடோர் ரிஸால் முபாராக் விவகாரம்.
* மலயக்காரர்களின் அங்காடிக் கடைகள் உடைக்கப்பட்டு நிலங்கள் பறிக்கப்படுவது மற்றும் சாமானிய மக்கள் குற்றவாளிகள் போல் நடத்தப்படுவது போன்ற முக்கியமான விவகாரங்களில் தங்களின் குரலை
எழுப்புவதிலிருந்து அம்னோ இளைஞர் பிரிவு ஒதுங்கி இருப்பதாக இப்ராஹிம் குற்றஞ்சாட்டினார்.
அம்னோ இளைஞர் பிரிவின் சேவை, கேகே மார்ட் அல்லது தேசியக் கொடி தலைகீழாக பறக்க விடப்பட்ட சம்பவங்களுக்கு எதிராக குரல் கொடுப்பது அல்ல. இந்த விவகாரங்களை அது அரசு சாரா அமைப்புகளிடம் விட்டுவிட வேண்டும் என்று அவர் கூறினார்.“அம்னோ இளைஞர் பிரிவு உண்மையில், சொந்த அரசாங்கத்தின் நிறை குறைகளை சரிபார்க்க வேண்டும். குறைகள் இருக்குமேயானால் அது குறித்து அரசாங்கத்துடன் வாதிட வேண்டும் என்பதோடு வலியுறுத்த வேண்டும்.
"ஆனால், இவ்வாறு செய்யாமல், அடிமைத்தனமாக்கப்பட்ட பூனைபோல் அப்பிரிவு செயல்படக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்."மக்களின் நலன்களுக்காக உண்மையாக போராடும் தலைவர்களோடு ஒப்பிடும்போது, பிரபலமாவதற்காகவே சிறு சிறு விவகாரங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் அரசியல்வாதிகள் மறக்கப்படுவார்கள்.
“உண்மையான களத்தில் தைரியமாக போராடும் தலைவர்கள்தான் சரித்திரத்தில் நிலைத்திருப்பார்கள். இதை நான் நல்ல நோக்கத்திற்காக கூறுகிறேன் என்று இப்ராஹிம் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



