எம்.ஆர். விஜயபாஸ்கர் ராஜினாமா; கரூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிப்பு
- Surendran Sumdraraj
- 30 Jun, 2026
சென்னை, ஜூன் 30 –
கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கரூர் சட்டமன்றத் தொகுதி அதிகாரப்பூர்வமாகக் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை நேரில் சமர்ப்பித்தார். சட்டப்பேரவை நடைமுறை விதிகள் 21 மற்றும் 22-இன் படி அவரது ராஜினாமா செல்லத்தக்கதாக இருப்பதை உறுதி செய்த சபாநாயகர், அதை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து கரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான எம்.ஆர். விஜயபாஸ்கர், சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ராஜினாமா செய்த ஆறாவது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆவார். அவர் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ராஜினாமாவால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அ.தி.மு.க.வின் உறுப்பினர் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. கரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ள நிலையில், அடுத்தகட்ட தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் பின்னர் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



