பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் அமைப்புகளுடன் ஓம்ஸ் பா.தியாகராஜன் சந்திப்பு!
- Muthu Kumar
- 15 Sep, 2025
பொதுப்பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்களின் தலைமையில் இயங்கும் மாணவர் அமைப்புகளுடன் ஓம்ஸ் அறவாரியத்தின் தோற்றுநரும் மலேசிய சமூகநல மறுமலர்ச்சி (அரிமா) தலைவருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் தமிழ் மலர் நாளிதழ் அலுவலகத்தில் சிறப்புச் சந்திப்பை நடத்தினார்.7 அரசுப் பொதுப் பல்கலைக்கழகத்தில் இருந்து 10 மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளாக 24 மாணவர்கள் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.
சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் முன்னெடுக்கும் செயல்திட்டங்களுக்கு ஆதரவளித்து வரும் ஓம்ஸ் பா.தியாகராஜன் அவர்கள் பல்கலைக்கழக மாணவர் அமைப்புகளின் சமூகநல மேம்பாடு, இளைஞர் மேம்பாடு, தமிழ் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழக மாணவர்களின் நிகழ்ச்சிகளுக்கு ஓம்ஸ் அறவாரியம் தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்றும் நம்பிக்கை அளித்தார். பல்கலைக்கழக மாணவர்கள், நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே வேளையில் உயர்கல்வியில் மாணவர்களின் அடைவுநிலையும் சிறந்து விளங்க வேண்டும் என்றும் ஓம்ஸ் பா.தியாகராஜன் கேட்டுக்கொண்டார்.
அடுத்த ஆண்டு ஓம்ஸ் அறவாரியத்தின் ஆதரவுடன் நடைபெறவிருக்கும் அனைத்துலக முதலாம் அகத்தியர் மாநாட்டிற்குப் பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்றும் அகத்தியர் மாநாட்டில் மாணவர்கள் பங்கேற்பது மட்டுமின்றி அனைத்துலக அளவில் நடைபெறவிருக்கும் அகத்தியர் மாநாட்டில் பல்கலைக்கழக மாணவர் அமைப்புகளும் இணை ஏற்பாட்டாளர்களாகவும் அங்கீகாரம் பெறவிருப்பதாகவும் ஒம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார்.
அகத்தியரின் அறிவியல் சிந்தனைகளை முதன்மைப்படுத்தி நடைபெறவிருக்கும் இம்மாநாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் பயன்பெறும் வகையில் இருக்கும் என்பதை அகத்தியர் மாநாட்டின் செயலாளர் பொன்ரங்கன் நம்பிக்கை அளித்தார். அனைத்துலக அகத்தியர் மாநாட்டில் பங்கேற்க விரும்பும் பல்கலைக்கழக மாணவர்களுக்குச் சிறப்புச் சான்றிதழுடன் இலவசமாகத் தங்கும் வசதியும் போக்குவரத்து வசதியும் ஏற்பாடு செய்யவிருப்பதாக அகத்தியர் மாநாட்டின் மாணவர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் தினகரன் சங்கரன் தெரிவித்தார்.
அகத்தியர் மாநாட்டில் பங்கேற்கும் பல்கலைக் கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளையும் முன்னுரிமைகளையும் பெற விரைந்து https://agathiyarconference. com எனும் அகப்பக்கத்தில் பதிவு செய்யலாம், அல்லது 0122443010 தினகரன் சங்கரனை நேரடியாகத் தொடர்பு கொண்டு விவரங்களையும் பெறலாம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



