ஜொகூர் பெர்சத்து தலைமைக்கான குழப்பம் தீவிரம்

top-news

ஜொகூர் பாரு, பிப். 10-

ஜொகூர் மாநில பெர்சத்து  (BERSATU) கட்சியில் நிலவி வரும் தலைமைக்கான குழப்பம் மேலும் தீவிரமடைந்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் உள்கட்சிப் பிரச்சினைக்கு தீர்வு காணத் தவறியதாக, கட்சித் தலைவர் முஹ்யிதீன் யாசின் மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

பெர்சத்து ஸ்ரீ காடிங் பிரிவு தலைவர் சம்ரி அகமட் வெளியிட்ட அறிக்கையில், கட்சியின் உச்சத் தலைமையிடம் இருந்து இதுவரை எந்தவொரு தெளிவான நடவடிக்கையும் எடுக்கப்படாதது மிகவும் ஏமாற்றமளிப்பதாகக் கூறினார். குறிப்பாக, முஹ்யிதீனின் மௌனப் போக்கு கட்சியின் ஒற்றுமையை மட்டுமன்றி, பெரிக்காதான் நேஷனல்  (PN) கூட்டணியின் அரசியல் நிலைத்தன்மையையும் பாதிக்கக்கூடும் என அவர் எச்சரித்தார்.

மேலும், ஜொகூர் பெர்சத்து தலைவர் டத்தோ டாக்டர் சஹ்ருத்தீன் ஜமால் பெரும்பான்மை பிரிவு தலைமைகளின் ஆதரவை இழந்துள்ளதாகக் கூறி, மாநிலத்தின் 14 பெர்சத்து  பிரிவு தலைவர்கள் அவரைப் பதவி விலகுமாறு வெளிப்படையாகக் கோரிக்கை விடுத்து இரு வாரங்கள் கடந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். இருப்பினும், இதுவரை கட்சித் தலைமையிடமிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அல்லது தீர்வு திட்டமும் வெளியிடப்படவில்லை.

“இது சாதாரணமான பிரச்சினை அல்ல. மாநிலத் தலைமையின் சட்டபூர்வத் தன்மை தொடர்பான முக்கியமான விவகாரம். இந்நிலையில் கட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பது மிகவும் கவலைக்குரியது,” என சம்ரி அக்மட் கூறினார்.

இந்த நிலை தொடருமானால், ஜொகூர் பெர்சத்துவில் உள்கட்சிப் பிளவு மேலும் தீவிரமடைந்து, மாநில அரசியல் சூழலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *