இறுதி நாளில் சிறையில் இந்திய நபர் மரணம்-தாய் முனியம்மாவுக்கு வெ. 560,000 இழப்பீடு!
- Muthu Kumar
- 10 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 10-
சிறைக் காவலில் இருந்து வெளியேறும் தினத்தன்று மரணமடைந்த ஆர்.சிவா என்பவரின் தாயாருக்கு ஐந்து லட்சத்து அறுபதாயிரம் வெள்ளி இழப்பீடு வழங்கும்படி ஈப்போ உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. சிவாவின் உடல்நலத்தைப் பாதுகாக்க அதிகாரிகள் தவறியதற்காக அந்த இழப்பீட்டுக்குத் தாம் உத்தரவிட்டதாக நீதித்துறை ஆணையர் மோசஸ் சூசையன் தெரிவித்தார்.
தாப்பா சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்பு சிவா ஆரோக்கியமுடன் இருந்துள்ளார்.ஆனால், விடுதலை செய்யப்படவிருந்த நாளில் அவரின் உடலை தாப்பா மருத்துவமனைக்குச் சென்று பெற்றுக் கொள்ளும்படி சிவாவின் சகோதரியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று மோசஸ் தெரிவித்தார்.சிவாவின் தாயார் ஆர். முனியம்மா என்பவர் தாக்கல் செய்த சிவில் வழக்கை ஏற்றுக்கொண்டபோது மோசஸ் இதனைக் கூறினார்.
சிவாவின் உடல் நிலை குறித்து அவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்க தாப்பா சிறைச்சாலை அதிகாரிகள் தவறியுள்ளனர். அக்குடும்பத்தினருடன் தொடர்பு கொள்வதற்கான விவரங்களை வைத்திருந்த போதிலும், சம்பந்தப்பட்ட அத்தகவல்களைச் சிறைச்சாலை அதிகாரிகள் மறைத்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
சிறைச்சாலை வசதிகள் மிக மோசமாக இருந்தது என்றும் சிறைச்சாலைச் சட்டத்தின் தரப்பாடுகளுக்கு ஏற்ற வகையில் அவை இல்லை என்றும் சிறைச்சாலையின் மருத்துவ அதிகாரி ஒருவர் குறுக்குவிசாரணையில் கூறியிருப்பதை மோசஸ் சுட்டிக் காட்டினார்.முனியம்மாவுக்கு இழப்பீட்டுத் தொகையாக ஐந்து லட்சத்து அறுபதாயிரம் வெள்ளியை வழங்கும்படி உத்தரவிட்ட அவர் செலவுத் தொகையாக எழுபதாயிரம் வெள்ளியை வழங்குமாறும் அரசாங்கத்திற்கு கட்டளையிட்டார்.
திருட்டுக் குற்றத்திற்காக எட்டு மாதச் சிறைத்தண்டனையை அனுபவித்த பிறகு 2017ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதியன்று சிறையிலிருந்து சிவா (வயது 30) வெளியாகவிருந்தார். ஆனால், அன்றைய தினமே அவர் மரணமடைந்தார். நோயின் விளைவாக இயற்கைக் காரணங்களால் அவர் உயிரிழந்ததாக மரண விசாரணை மன்றம் தீர்ப்பளித்தது.
முனியம்மா தமது வழக்குமனுவில் தாப்பா சிறைச்சாலை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், கூட்டரசு அரசாங்கம் ஆகிய பதின்மூன்று தரப்பினரை பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிட்டிருந்தார். அலட்சியப் போக்கு, சட்டப்பூர்வமான கடமைகளை நிறைவேற்றத் தவறியது, அரசாங்கப் பணியில் குற்றமிழைத்தது ஆகிய குற்றங்களை அவர் சுமத்தியிருந்தார்.
முனியம்மாவை வழக்கறிஞர்கள் எம்.விஸ்வநாதன், வி.சஞ்சய் நாதன், பூஷண் கின் நாதன் ஆகியோர் பிரதிநிதித்தனர். அரசாங்கத்தின் சார்பில் மூத்த கூட்டரசு வழக்கறிஞர்களான சித்தி ஆயிஷா ரம்லான் மற்றும் கூட்டரசு வழக்கறிஞர் சித்தி நொராஷிகின் ஹசானோர் ஆகியோர் ஆஜராகினர்.
Mahkamah Tinggi Ipoh mengarahkan kerajaan membayar RM560,000 kepada ibu R. Siva yang meninggal pada hari pembebasannya dari penjara. Hakim mendapati pegawai penjara cuai menjaga kesihatannya. RM70,000 turut diperintah sebagai kos perbicaraan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



