தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் இந்திய பிரதமர்!
- Muthu Kumar
- 23 Nov, 2025
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி20அமைப்பின் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது.இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகள் என 42 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
குறிப்பாக இத்தாலி அதிபர் ஜார்ஜியா மெலோனியுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, மாநாட்டின்போது பிரதமர் மோடியை அவர் ஆரத் தழுவி வாழ்த்து தெரிவித்தார். இருவரும் சிறிது நேரம் நட்புடன் கலந்துரையாடினர். இரு நாடுகள் இடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதியேற்றனர். ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அந்தோணியா குத்தேரஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நிர்வாகிகளுடனும் பிரதமர் மோடி தனித்தனியாக பேசினார்.
பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இருவரும்சிறிது நேரம் உரையாடினர். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்போன்ஸ், கனடா பிரதமர் மார்ச் கார்னி, பிரதமர் மோடி ஆகிய 3 தலைவர்களும் தனியாகபேச்சுவார்த்தை நடத்தினர். தென்கொரிய அதிபர் லீ ஜே மியூங்கை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "தென்கொரிய அதிபர் மியூங்கை 2-வது முறையாக சந்தித்துப் பேசு கிறேன். இரு நாடுகள் இடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்த ஆலோசனை நடத்தினேன்" என்று தெரிவித்தார்.
ட்ரம்ப், புதின், ஜின்பிங்ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பங்கேற்கவில்லை. தென்னாப்பிரிக்காவில் வெள்ளையின மக்களுக்கு எதிராக பல்வேறு கொடுமைகள் நடைபெறுவதால் மாநாட்டை புறக்கணிப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். உக்ரைன் போர் காரணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கைது செய்ய சர்வதேச நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்திருக்கிறது.
இதன் காரணமாக அவரும் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் மாநாட்டில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக சீன பிரதமர் லீ கெச்சியாங் மாநாட்டில் கலந்து கொண்டார்.
முன்னதாக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது, இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான உறவை வலுப்படுத்த பாலமாக செயல்பட வேண்டும் என்று அவர்களை கேட்டுக் கொண்டார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



