தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
- Muthu Kumar
- 03 Nov, 2025
தங்களின் முதல் உலகக்கோப்பையை வென்று வரலாற்றை படைத்திருக்கிறார்கள் இந்திய மகளிரணியினர். கபில்தேவ், தோனி இந்த வரிசையில் தன்னுடைய பெயரையும் பதித்து நிற்கிறார் ஹர்மன்ப்ரீத் கவுர்.
இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டிருந்தது. ஒரு உலகக்கோப்பையில் அதுவும் நாக் அவுட்டில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வது ஆபத்தான விஷயம். இந்தியாவே பல முறை அடி வாங்கியிருக்கிறது. ஆனால், இந்த முறை காற்று இந்தியா பக்கமாக வீசியது. ஜெமிமா தன் வாழ்நாளுக்கும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கான ஒரு இன்னிங்ஸை ஆடினார். தோனியின் 91* என்பது எப்படி மறக்கமுடியாத எண்ணாக மனதில் நிற்கிறதோ அதேமாதிரி ஜெமிமாவின் அந்த 127* என்கிற எண்ணையும் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாது.
அசாத்தியமான வெற்றி அது. இந்த வெற்றிதான் இந்த உலகக்கோப்பையின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்தது. அத்தனை பேரையும் இறுதிப்போட்டியை நோக்கி எதிர்பார்க்க வைத்தது. யாரிடம் கேட்டாலும் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதே மிகப்பெரிய விஷயம் என்கின்றனர். ஆனால், பெண்கள் கிரிக்கெட்டின் பரிணாமத்தை பார்த்தவர்களுக்கு இந்தியா ஆஸ்திரேலியாவை விட பல பலமான சிக்கல்களையும் ஆபத்துகளையும் தாண்டியிருக்கிறது என்பதை அறிய முடியும்.
பெண்கள் உலகக்கோப்பையை ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும்தான் மாறி மாறி வென்றிருக்கின்றன. காரணம், அந்த அணியினர் அதிகமான போட்டிகளில் ஆடுவார்கள். எல்லா பார்மட்டிலும் கவனம் செலுத்துவார்கள். உள்ளூர் கிரிக்கெட்டின் தரமும் சிறப்பாக இருக்கும். ஆனால், இங்கே அதற்கெல்லாம் இடம் கிடையாது. அந்த 2013 உலகக்கோப்பை இருக்கிறதல்லவா? அதற்கு முன்பான இரண்டு மாதங்களில் இந்திய அணி எந்தப் போட்டியிலும் ஆடியிருக்காது. அதேமாதிரி, கொரோனா காலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தியாவின் ஆண் கிரிக்கெட்டர்கள் அதிகபட்சமாக 6 மாதங்களுக்கு கிரிக்கெட் ஆடாமல் இருந்திருப்பார்கள். ஆனால், இந்திய பெண் கிரிக்கெட்டர்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு கிரிக்கெட் ஆடாமல் இருந்திருந்தார்கள்.ஆண்களுக்கான போட்டிகளை நடத்த முனைப்பு காட்டிய கிரிக்கெட் நிர்வாகிகள், பெண்களுக்கான போட்டிகள் நடக்கும் போது நடக்கட்டும் என்ற மனநிலையிலேயே இருந்தார்கள்.
இவை எல்லாவற்றையும் மீறி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நேற்று வெற்றி வாகை சூடியது,இந்திய பெண்கள் அணியின் முதல் கேப்டனான சாந்தா ரங்கசாமி தொடங்கி அஞ்சும் சோப்ரா தொட்டு இப்போதைய ஹர்மன்ப்ரீத் வரைக்கும் எல்லாருடைய கனவுதான். அந்த கனவை நோக்கிய பெரும் பாய்ச்சலின் அறுவடைதான் ஹர்மன்ப்ரீத் & கோ வென்றிருக்கும் இந்த உலகக்கோப்பை.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



