1,000 விமானங்கள் ரத்து - பயணிகளை கடும் சிரமத்துக்கு உள்ளாக்கிய இண்டிகோ!

top-news
FREE WEBSITE AD

இந்தியா முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,000 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இண்டிகோ விமான சேவை இன்று முதல் படிப்படியாக சீராகும் என்று இந்திய மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்து இருந்தது.

ஆனால் அடுத்த சில மணிநேரங்களில் இண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் பயணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார். இண்டிகோ விமான சேவை சீராக இன்னும் 10 நாட்கள் வரை ஆகலாம் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் இண்டிகோ விமான சேவையில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் பல நூறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி ஏராளமான விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. இதற்கு முக்கிய காரணம் போதிய அளவுக்கு பைலட்டுகள் இல்லாததும், விமான பணியாளர்கள் இல்லாததும் தான்.

இந்நிலையில் தான் நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 1,000 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். விமான நிலையங்களில் பயணிகள் வாக்குவாதம் செய்கின்றனர். அதுமட்டுமின்றி இண்டிகோ விமானங்கள் அடுத்தடுத்து ரத்தாவதால் பிற விமான நிறுவனங்கள் தங்களின் கட்டணங்களை பல மடங்கு வரை உயர்த்தி உள்ளன. இது பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இந்நிலையில் தான் இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் சார்பில் அனைத்து பைலட்டுகளின் சங்கங்களுக்கும் கடிதம் எழுதியது. மேலும் பைலட் மற்றும் விமான பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்பி விமான சேவையை இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று கடிதம் எழுதி உள்ளது. அதுமட்டுமின்றி இன்று முதல் இண்டிகோ விமான சேவை படிப்படியாக இயல்பு நிலைக்கு வரும் என்று நம்பிக்கையை அளித்தது.

இது பயணிகளுக்கு நம்பிக்கையை தந்தது. ஆனால் அதற்குள் பயணிகளின் தலையில் இடியை இறக்கி உள்ளார் இண்டிகோ விமான நிறுவனத்தின் சிஇஓ பீட்டர் எல்பர்ஸ். இண்டிகோ விமான சேவைகள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில் முதல் முறையாக அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி பீட்டர் எல்பர்ஸ் கூறியுள்ளதாவது:

''நான் உங்களிடம் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எங்களின் விமான சேவைகள் கடந்த சில நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று வரை அந்த நிலை அப்படியே உள்ளது. இன்றைய தினம் என்பது அதிகமான விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,000க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எங்களின் தினசரி விமான சேவையில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை பாதிக்கப்பட்டுள்ளது.

இண்டிகோ விமான சேவை முழுவதுமாக மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப 5 முதல் 10 நாட்கள் வரை ஆகும் என்று எதிர்பார்க்கிறோம். அதன்படி டிசம்பர் 10ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதிக்குள் விமான சேவை இயல்பு நிலைக்கு வருகிறோம். பயணிகள் விமானங்களின் இயக்கம் தொடர்பான அப்டேட்டுகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். விமானங்கள் ரத்து மற்றும் காலதாமதம் உள்ளிட்டவற்றுக்கு நானும், இண்டிகோவின் அனைத்து நிர்வாகிகளுடன் பயணிகளிடம் மன்னிப்பு கோருகிறோம்'' என்று கூறியுள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *