பத்துமலை மின்படிக்கட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி - இரு தரப்பும் இணக்கம்
- Shan Siva
- 19 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 19: பத்து மலை கோயிலில் மின்படிக்கட்டு அமைக்கும் திட்டத்தை, தேவையான தொழில்நுட்ப விவகாரங்களுக்குத்வ் தீர்வு காணப்பட்ட பின் தொடர்ந்து முன்னெடுக்க, சிலாங்கூர் மாநில அரசு மற்றும் பத்து மலை கோயில் நிர்வாகம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
இந்த முடிவு, நேற்று பிற்பகல் பத்து மலை கோயிலில் நடைபெற்றஒரு கலந்துரையாடல் கூட்டத்தின் போது எடுக்கப்பட்டதாக, டிஏபி கட்சியின் தலைவர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
அந்தக் கூட்டத்தில், மின்படிக்கட்டுகள் திட்டம் தொடர்பாக அனைத்து விதிமுறைகளும் மிகவும் கவனமாக பின்பற்றப்பட வேண்டும் என்பதில் இருதரப்பும் இணக்கம் கண்டதாக அவர் கூறினார்.
பத்து மலை கோயில் முன்னர் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஓர் அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருவதால், அதன் விண்ணப்ப நடைமுறை பொதுவான நடைமுறைகளில் இருந்து வேறுபடுவதாகவும் கோபிந்த் சிங் டியோ விளக்கினார்.
இந்த கூட்டத்தின் போது, கோயில் நிர்வாகக் குழு தலைவர் ஆர். நடராஜா, மின்படிக்கட்டு அமைக்கப்பட உள்ள நிலத்திற்கு தற்காலிக நில பயன்பாட்டு உரிமம் பெற, தாம் விண்ணப்பம் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து, அந்த விண்ணப்பம் நடராஜாவின் தனிப்பட்ட பெயரில் தாக்கல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது என்றும், அது சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில்பதிவுசெய்யப்பட்ட ஒரு சங்கத்தின் பெயரில் செய்யப்பட வேண்டும் என்றும் கருத்து முன்வைக்கப்பட்டிருந்ததாக கோபிந்த் சிங் டியோ கூறினார்.
இந்த காரணங்களினால், இதுவரை அந்த விண்ணப்பத்திற்கு மாநில அரசு அனுமதி வழங்கவில்லை எனவும், ஆனால் அந்த விண்ணப்பம் நடராஜாவின் தனிப்பட்ட பெயரில் அல்ல, கோயில் அறக்கட்டளை தலைவர் என்ற வகையில் அவர் மூலம் தாக்கல் செய்யப்பட்டதாக நடராஜா தெளிவுபடுத்தியதாகவும் கோபிந்த் சிங் டியோ தனது எக்ஸ் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சிலாங்கூர் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் வி. பப்பராய்டு உடனும் தாம் கலந்துரையாடியதாகவும், விண்ணப்பத்தை விரைவில் முடிக்க தேவையான அனைத்து விதிமுறைகளையும் முன்னெடுக்க மாநில அரசு மற்றும் கோயில் நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது பொதுமக்களுக்குப் பயனான விஷயம் எனவே, இனி இது தொடர்பான சர்ச்சைகள் வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பத்துமலை மின் படிக்கட்டுத் திட்டத்திற்கு தனது முழு ஆதரவு உண்டு என்று கூறினார்.
நேற்று நடைபெற்ற இந்த சிறப்பு சந்திபுக்கூட்டத்தில் கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர் நடராஜா, சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு மற்றும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற முறையில் தாம் இந்த திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என்று பாப்பா ராயுடு தெரிவித்துள்ளார்.
இரு தரப்பும் ஒன்றுகூடி ஒருங்கிணந்ததில் பத்துமலை மின் படிக்கட்டு சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



