75 முறை உருமாற்றத்துடன் மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா?

top-news
FREE WEBSITE AD

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஒமைக்ரான் வைரஸின் புதிய உருமாற்றமான 'சிக்காடா' (Cicada - BA.3.2) வேகமாகப் பரவி வருவது உலக சுகாதார அமைப்பினரிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.கடந்த சில ஆண்டுகளாக அமைதியாக இருந்த கொரோனா வைரஸ், தற்போது 'சிக்காடா' என்ற புதிய வடிவில் உருவெடுத்துள்ளது. 2022-இல் மறைந்து போனதாகக் கருதப்பட்ட ஒமைக்ரானின் BA.3 பிரிவிலிருந்து இது உருமாறி மீண்டும் தோன்றியுள்ளது.

சிக்காடா என்ற பூச்சி இனம் பல ஆண்டுகள் மண்ணுக்கு அடியில் மறைந்திருந்துவிட்டு, திடீரென வெளியே வரும் தன்மை கொண்டது. அதேபோல, இந்த வைரஸும் சுமார் இரண்டு ஆண்டுகளாக எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் 'தூக்க நிலையில்' இருந்துவிட்டு, தற்போது 75-க்கும் மேற்பட்ட மரபணு மாற்றங்களுடன் வெளிவந்துள்ளதால் ஆராய்ச்சியாளர்கள் இதற்கு இந்தப் பெயரைச் சூட்டியுள்ளனர்.

இந்த வைரஸில் 70 முதல் 75 வரையிலான மரபணு மாற்றங்கள் அதன் ஸ்பைக் புரோட்டீனில் ஏற்பட்டுள்ளன. இது முந்தைய வைரஸ்களை விட மிக வேகமாகப் பரவும் தன்மையைக் கொண்டது. உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியையும், ஏற்கனவே போடப்பட்ட தடுப்பூசிகளையும் மீறித் தாக்கும் வல்லமை இதற்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் 25 மாநிலங்களிலும், ஐரோப்பாவின் ஜெர்மனி, டென்மார்க், நெதர்லாந்து உள்ளிட்ட 23 நாடுகளிலும் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. கடுமையான தொண்டை வலி, அதிகப்படியான உடல் சோர்வு மற்றும் லேசான காய்ச்சல் மற்றும் குளிர் நடுக்கம், சிலருக்கு வயிற்றுப்போக்கு போன்ற செரிமானக் கோளாறுகள் ஆகியவை அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

இந்த வைரஸ் வேகமாகப் பரவினாலும், முந்தைய டெல்டா வைரஸைப் போல நுரையீரலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி மரண விகிதத்தை உயர்த்தவில்லை என்பது ஓரளவுக்கு நிம்மதி தரும் விஷயமாகும். இருப்பினும், முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *