ஒற்றுமை அரசு உறுதியானது – மலேசியாவின் எதிர்காலத்தை வடிவமைப்போம்! - அன்வார் இப்ராஹிம்

top-news
FREE WEBSITE AD

அங்காரா, ஜன 7: ஒற்றுமை அரசு உறுதியுடன் நிலைத்து நிற்கிறது என்றும், அந்தக் கூட்டு பலத்தை பயன்படுத்தி மலேசியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டங்கள் தொடர்ச்சியாகவும் திறம்படவும் நடைமுறைப்படுத்தப்பட்டு, புதிய தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் பொறியியல் துறைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டால், அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டில் கணிசமான மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் அவர் கூறினார்.

துருக்கியின் அங்காராவில் நேற்று இரவு நடைபெற்ற மலேசிய வெளிநாட்டு குடிமக்களுடனான நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், முன்னேற்றம் எப்போதும் உறுதி செய்யப்பட்ட ஒன்றல்ல என்றும், நல்ல ஆட்சி இல்லையெனில் முன்னேறிய நாடுகள்கூட வீழ்ச்சியடையக்கூடும் என்றும் எச்சரித்தார்.

பொருளாதாரமும் கலாச்சாரமும் வலுவாக இருந்த நாகரிகங்கள் கூட, பரவலான ஊழல் காரணமாக சீரழிந்து, வறுமையில் தள்ளப்பட்டு, இறுதியில் அழிவைச் சந்தித்த வரலாறு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் எதிர்காலம் மக்களின் தேர்வுகளில்தான் தங்கியுள்ளது என்றும் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

குடும்பம், சமூகம், நாடு மற்றும் மனிதகுலத்தை பாதுகாக்கும் நல்ல மனிதராக இருப்பதா, அல்லது ஊழலால் பழிக்கப்பட்டவராக மாறுவதா என்பது ஒவ்வொருவரின் கையிலேயே உள்ளது என்றும் அவர் கூறினார்.

நிதியமைச்சருமான அன்வார், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகானின் அழைப்பின் பேரில், ஜனவரி 6 முதல் 8 வரை துருக்கிக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தப் பயணத்தில் அவரது மனைவி டாக்டர் வான் அஸீசா வான் இஸ்மாயில், வெளியுறவுத் துறை அமைச்சர் முஹமட் ஹசான், உயர்கல்வி அமைச்சர் ஜம்ப்ரி அப்துல் காதிர், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் ஜோஹாரி கானி உள்ளிட்டோர் உடன் சென்றுள்ளனர்.

இந்தப் பயணம் மலேசியா – துருக்கி இடையிலான வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வெளியுறவுத்துறை தகவலின்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை மலேசியா – துருக்கி இடையிலான மொத்த வர்த்தகம் 21.2 பில்லியன் ரிங்கிட் மதிப்பை எட்டியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் 5.2 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், அதை 10 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *