குற்ற உணர்ச்சி கொண்டவர்களுக்குத்தான் சட்டப் பாதுகாப்பு தேவை- அன்வாருக்கு மகாதீர் பதில்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 24-

வயதாகி விட்டது என்பதற்காக எனக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது பதிலடி கொடுத்துள்ளார்.பத்து பூத்தே தீவு விவகாரம் தொடர்பில் தமக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சரவை மறுத்திருப்பதைத் தொடர்ந்து மகாதீர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மையென்றால் அதனை நிரூபிக்க என்னை நீதிமன்றத்திற்கு வரவழைத்திருக்க வேண்டும் என்று தமது "எக்ஸ்" தளப் பதிவில் மகாதீர் வலியுறுத்தினார்.அன்வார்தான் என்னைக் குற்றவாளி என்று முடிவுசெய்துள்ளார். என் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது கூறியிருப்பவரும் அவர்தான். நூறு வயதாகிவிட்டதால், என் மீது குற்றம் சுமத்தப்படவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.

எனக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதுதான் இதன் பொருளாகும். நான் குற்றமற்றவன் என்பது எனக்குத் தெரியும். அதனை நிரூபிக்க நான் விரும்புகிறேன். உண்மையில் குற்றம் செய்தவர்கள்தான் நீதிமன்றம் செல்ல பயப்படுவார்கள். அத்தகைய நபர்களுக்குத்தான் சட்டப் பாதுகாப்புச் சலுகை தேவைப்படுகிறது என்றார் அவர்.

பத்து பூத்தே இறையாண்மை மீதான விண்ணப்பத்தை கடந்த 2018ஆம் ஆண்டில் அப்போது பிரதமராக இருந்த மகாதீர் வேண்டுமென்றே மீட்டுக் கொண்டார் என்று அரச விசாரணை ஆணையம் கடந்தாண்டில் தீர்ப்பளித்திருந்தது.மகாதீர் மோசடி வேலையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருப்பதால், அவரை தண்டனைச் சட்டத்தின் 415 (பி) பிரிவின்கீழ் விசாரிக்க வேண்டும் என்றும் அந்த ஆணையம் பரிந்துரைத்திருந்தது.

இந்நிலையில், மகாதீரின் வயதைக் கருதி அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று நேற்றுமுன்தினம் அன்வார் தெரிவித்திருந்தார்."இந்த விவகாரத்தில் அன்வார் ஒரே நேரத்தில் நீதிபதியாகவும் அரசு வழக்கறிஞராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு பெரும் அதிகாரம் உள்ளதை இது காட்டுகிறது. ஆனால், பிரதமர் ஒருவர் அரசு வழக்கறிஞராக அல்லது நீதிபதியாகச் செயல்பட முடியும் என்று எந்தவொரு சட்டமும் சொல்லவில்லை "என்று மகாதீர் சுட்டிக் காட்டினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *