பினாங்கில் நெகிழிப் பைகளையும் உறிஞ்சிப் பயன்பாட்டையும் முற்றாகத் தவிர்க்கக் கோரும் தீவிரப் பரப்புரை!
- Muthu Kumar
- 15 Aug, 2025
(ஆர்.ரமணி)
பினாங்கு, ஆக. 15-
பினாங்கு மாநிலத்தின் வடகிழக்கு மாவட்டத்திலுள்ள இரு பல்பொருள் பேரங்காடி மையங்களில், நெகிழிப் பைகள் மற்றும் உறிஞ்சிப் பயன்பாடுகளை முற்றாகத் தவிர்க்கக் கோரும் தீவிரப் பரப்புரை நிகழ்த்தப்பட்டது.
நேற்று முன்தினம் அதிரடியாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், பினாங்கு மாநில மாநகர் மன்றத்தின் உறுப்பினர் குழுவினர் ஆர்வமுடன் களமிறங்கி தத்தம் பரப்புரைகளை நிகழ்த்தி இங்கிருக்கும் வணிகர்கள் மத்தியில் விழிப்புணர்வை தூண்டினர்.
மாநகர் மன்றத்தின் பொதுக்கல்வி பிரிவின் துணையுடன் நடத்தப்பட்ட இந்தப் பரப்புரைகளின் முதல் கட்டத்தில், ஷாபீஸ் ரஹீம் ராஜா, ரோஹைஸாட் ஹமீட், சான் சூன் ஆன், கோய் கெயிக் கீ, நூர்ஹிதாயா சே ரோஸ், சாகுல் ஹமீட் இஷாக்,விஸ்வநாதன் தங்கவேலு, ஹாஜி முகமட் யூசோப் முகமட் சன்ஷைன் பல்பொருள் பேரங்காடி மையத்தில் களமிறங்கினர்.
இந்த மையத்தில் உள்ள அனைத்து உணவு வளாகங்களுக்கும் சென்ற அக்குழுவினர் நெகிழிப் பைகளையும் உறிஞ்சிகளையும் தவிர்க்கக் கோரும் கையேடுகளையும் விளக்கப் படங்களையும் விநியோகித்து, இந்த விவகாரத்தில் முழு ஒத்துழைப்பு வழங்கக் கோரி வேண்டுகோள் விடுத்தனர்.
இதே போன்று இங்கிருக்கும் கர்னி பிளாஸா பேரங்காடி மையத்திலும் இதே நோக்கத்தின் பேரில் வருகையளித்திருந்த அக்குழுவினர்,தங்களின் பரப்புரையை இங்கு தொடங்கிய போது, முன்னதாகவே இங்குள்ள சில உணவுக் கூடங்களில் உறிஞ்சிகளை பயன்படுத்துவதில்லை என்று அவற்றின் நடத்துநர்கள் அளித்த விளக்கங் களால் மாநகர்மன்றஉறுப்பினர் குழுவினர் திருப்தியடைந்தனர்.
நெகிழிப் பைகளுக்கும் நெகிழி உறிஞ்சிகளுக்கும் இவ்வாண்டுஜனவரி முதல் மாநகர் மன்றம் தடை விதித்திருக்கும் விவகாரத்தில்,அநேக விற்பனை மையங்களும் உணவகங்களும் ஒத்துழைப்பு வழங்கியிருக்கும் நிலையில், இன்னமும் சில தரப்பினரிடையே பூரண இசைவிணக்கம் கிட்டாதிருப்பது தொடர்பில், தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகள் இங்கு பரவலாகவும் அதே வேளையில் தீவிரமாகவும் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



