சர்வதேச போதை பொருள் மன்னர் எல் மென்சோ சுட்டு கொலை!
- Muthu Kumar
- 23 Feb, 2026
உலகில் தேடப்படும் முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரரான எல் மென்சோ, மெக்ஸிகோவில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையின்போது கொல்லப்பட்டுள்ளார்.
ராணுவ நடவடிக்கையில் பலத்த காயமடைந்த எல் மென்சோ உயிரிழந்ததாக அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. எல் மென்சோ மரணத்தைத் தொடர்ந்து மெக்சிகோவில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.
மெக்சிகோ நாட்டில் போதைப் பொருள் கடத்தல் என்பது பெரிய பிரச்சனையாகவே இருந்து வருகிறது. அமெரிக்க அதிபரான டிரம்ப் கூட இது தொடர்பாக வெளிப்படையாகவே மெக்சிகோ மீது அதிருப்தி தெரிவித்திருந்தார். அமெரிக்காவில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரிக்க இதுவே காரணமாக இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதற்கிடையே உலகின் தேடப்படும் முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரரான எல் மென்சோவை மெக்சிகோ ராணுவம் கொன்றுள்ளது. மெக்சிகோ ராணுவம் எடுத்த தீவிர நடவடிக்கைகளில் அந்த நபர் உயிரிழந்ததாக அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. நெமேசியோ ரூபன் ஒசெகுவேரா செர்வான்டஸ் என்றும் அறியப்படும் எல் மென்சோ கொல்லப்பட்டுள்ளது போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான மிக முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
அவரது மரணத்தைத் தொடர்ந்து மெக்சிகோவில் பல்வேறு இடங்களிலும் மிகப் பெரிய வன்முறை ஏற்பட்டுள்ளது.. ஜலிஸ்கோ உட்பட மெக்ஸிகோவின் பல மாநிலங்களில் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. மேலும், ஆயுதம் ஏந்திய கும்பலால் முக்கிய நெடுஞ்சாலைகள் மறிக்கப்பட்டன. இதனால் மெக்சிகோ நாடு முழுக்க பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜலிஸ்கோ மாநிலத்தின் மேற்குப் பகுதியில் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலின்போது போதைப்பொருள் மன்னன் எல் மென்சோ படுகாயமடைந்துள்ளார். அவரை காப்பாற்ற மெக்சிகோ சிட்டிக்கு விமானம் மூலம் அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இருப்பினும், அவர் வழியிலேயே உயிரிழந்ததாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது..
எல் மென்சோவின் ஜலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல் (CJNG), கடந்த 10 ஆண்டுகளில் மெக்ஸிகோவின் மிகவும் சக்திவாய்ந்த க்ரைம் கும்பலாக உருவெடுத்தது. இது அமெரிக்கா சட்டவிரோதப் போதைப்பொருள் கடத்தலிலும் முக்கிய பங்காற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. எல் மென்சோ மரணத்திற்குப் பிறகு மெக்சிகோவில் வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த மாகாண அரசுகளோடு இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிபர் கிளாடியா ஷீன்பாம் அறிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



