ஜொகூர் முழுவதும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை -176 பேர் கைது!
- Muthu Kumar
- 12 Oct, 2025
(கோகி கருணாநிதி)
ஜொகூர் பாரு, அக்.12-
ஜொகூர் மாநில அரசு, மாநிலத்தில் அமைதி மற்றும் நலனை நிலைநிறுத்தும் நோக்கில் போதைப்பொருள் தவறான பயன்பாட்டைத் தடுக்க தொடர்ந்து உறுதியாக செயல்பட்டு வருகிறது.
அந்த நோக்கத்திலேயே. ஜொகூர் மாநில போதைப்பொருள் தடுப்பு முகமை இயக்குநர் ஹாஜி முகட் ஃபைசல் பின் மக்சோம் தலைமையிலான ஒருங்கிணைந்த நடவடிக்கையில், மாநிலத்தின் எட்டு முக்கிய மாவட்டங்களில் ஒரே நேரத்தில் விரிவான சோதனை நடத்தப்பட்டது. ஜொகூர் பாரு மாவட்டத்தில் நடைபெற்ற நடவடிக்கையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேரடியாக பங்கேற்று தரைநிலையிலான நிலவரத்தை நேரில் பார்வையிட்டார் மாநில சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழுத் தலைவர் லிங் தியான் சூன்.
இந்நடவடிக்கை அக்டோபர் 9 ஆம் தேதி அதிகாலை 3.00 மணிக்கு அனைத்து அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்ட விளக்கக் கூட்டத்துடன் தொடங்கியது. அதன் பின் இரண்டு முக்கிய குழுக்களாகப் பிரிக்கப்பட்ட அணிகள் செயல்பட்டன.
ஒரு குழு. போதைப்பொருள் பழக்கத்திற்காக அடிக்கடி பயன்படுத்தப்படும் 'ஹாட்ஸ்பாட்' பகுதிகளில் திடீர் சோதனைகள் மேற்கொண்டு பலரை கைது செய்தது. மற்றொரு குழு, புலனாய்வு தகவல்கள் மற்றும் பொதுமக்கள் புகார்களின் அடிப்படையில் சந்தேக நபர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு, போதைப்பொருள் பயன்பாட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்தது.
அக்டோபர் 10 ஆம் தேதி இரவு வரை இரண்டு நாட்கள் தீவிரமாக நடைபெற்ற இந்த நடவடிக்கையில் முடிவுகள் கிடைத்தன. ஜொகூர் பாரு மாவட்டத்தில் மட்டும் 49 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 45 பேர் போதைப்பொருள் எடுத்திருப்பது உறுதி செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் 176 பேர் கைது செய்யப்பட்டு, 155 பேர் போதைப்பொருள் எடுத்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது மேலதிக விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அடுத்தடுத்த சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட உள்ளனர்.
ஜொகூர் மாநில அரசு, போலீஸ், தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமை மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளுடன் இணைந்து, போதைப்பொருள் தவறான பயன்பாட்டை முழுமையாக ஒழிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை வலுப்படுத்தி வருகின்றது. இத்தகைய முயற்சிகள், மாநிலத்தை அமைதி பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையுடன் கூடிய வாழ்விடமாக தக்கவைத்துக் கொள்ள அரசின் உறுதியான முயற்சிக்கான சான்றாகும் என்றார் லிங் தியான் சூன்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



