குடியுரிமை விண்ணப்பங்கள் தொடர்பிலான உள்துறை அமைச்சின் இருவருக்கு எதிரான விசாரணை தொடர்கிறது!
- Muthu Kumar
- 13 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 13-
குடியுரிமை விண்ணப்பங்களை துரிதப்படுத்துவதில் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படும் லஞ்ச ஊழல் தொடர்பில் கைதாகி இருக்கும் உள்துறை அமைச்சை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் மற்றும் ஒரு தனிநபருக்கு எதிரான சம்பவத்தை மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) இன்னமும் விசாரணை செய்து வருகிறது.
இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணையின் உள்ளடக்கங்கள் குறித்த எந்த ஒரு தகவலையும் எம்ஏசிசியினால் வெளியிட முடியாது என்று, சட்டம் மற்றும் கழகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அஸாலினா ஒஸ்மான் கூறியுள்ளார்.
"எம்ஏசிசியைப் பொறுத்த வரையில், அச்சம்பவம் இன்னமும் விசாரணையின் கீழ் இருந்து வருகிறது. ஆதலால், விசாரணை தொடர்பிலான எந்த ஒரு தகவலையும் வெளியிடக் கூடாது என்பது தொடர்பிலான, 2009ஆம் ஆண்டு மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் துணை விதி 294க்கு எம்ஏசிசி கட்டுப்பட்டுள்ளது என்று. ஒரு நாடாளுமன்ற பதிலில் அஸாலினா தெரிவித்தார்.
கடந்த மே 8ஆம் தேதி நடந்த அக்கைது குறித்த தகவல் எதனையும் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா என்று. பெரிக்காத்தான் நேஷனலின் பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மாட் ஃபட்லி கேட்ட ஒரு கேள்விக்கு அஸாலினா இவ்வாறு பதிலளித்தார்.அச்சம்பவம் தொடர்பில் தகவல் ஒன்றைப் பெற்ற பின்னர், புத்ராஜெயாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையின் போது அம்மூவரும் கைது செய்யப்பட்டதாக எம்ஏசிசி கூறியிருந்தது.
போலி ஆதரவு ஆவணங்களைப் பயன்படுத்தி, மலேசிய பிரஜைகளாக பிறக்காதவர்களை மலேசியப் பிரஜைகளாக பதிவு செய்யும் ஒரு கும்பலின் தலைவனாக செயல்பட்டதாக நம்பப்படும் ஒரு பொதுச் சேவை ஊழியர் கைது செய்யப்பட்ட பின்னர், அம்மூவரும் கைதானதாகவும் எம்ஏசிசி தெரிவித்திருந்தது.
நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகளில் ஒன்று அல்லது நீதிமன்ற பரிசீலனையில் உள்ள ஒரு விஷயத்துடன் தொடர்புடையது என்பதால், துன் டைம் ஸைனுடின் மற்றும் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீதான தனது விசாரணையின் நிலை குறித்த ஒரு கேள்விக்கு எம்ஏசிசியினால் பதிலளிக்க முடியாது என்றும் அஸாலினா கூறினார்.
“இக்கேள்வி, நாடாளுமன்ற நிலை உத்தரவு 230 மீறுவதாகும். எனவே, இதற்கு பதிலளிக்கப்படக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.டைம் மற்றும் இஸ்மாயில் சப்ரி மீதான எம்ஏசிசியின் விசாரணை நிலைப்பாடு என்ன என்று பக்காத்தான் ஹராப்பானின் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கேள்வி எழுப்பி இருந்தார்.
இஸ்மாயில் சப்ரிக்கு எதிராகக் கூறப்படும் லஞ்ச ஊழல் மற்றும் கள்ளப் பணப் பரிமாற்றம் மீதான தனது விசாரணையை எம்ஏசிசி முடித்துக் கொண்டதாக, அதன் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி கடந்த ஜூன் மாதத்தில் தெரிவித்திருந்தார்.
மேல்நடவடிக்கைக்காக அதன் தொடர்பிலான விசாரணை அறிக்கை அரசு தரப்பு வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் அந்த பேரா நாடாளுமன்ற உறுப்பினர் மீது குற்றம் சுமத்துவது குறித்த முடிவு "இன்னும் ஒரு மாதத்திற்குள் செய்யப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



