பிரேசில் முஸ்லீம் சமூகத்தினருடன் அன்வார் சந்திப்பு!
- Muthu Kumar
- 19 Nov, 2024
ரியோ டி ஜெனிரோ (பிரேசில்), நவ. 19
பிரேசிலுக்கான தமது பயணத்தை ஞாயிற்றுக் கிழமை தொடங்கிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அதன் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் உள்ள முஸ்லிம் சமூகத்தினருடன் ஹலால் விவகாரம் மற்றும் இஸ்லாமிய சமயப் போதனை குறித்த ஒரு வழக்கமான விவாதத்தை நடத்தியுள்ளார்.
பிரேசிலில் உள்ள முஸ்லிம் சமூகத்தினரிடம், கல்வி மற்றும் இஸ்லாமிய போதனைகள் மூலம் இஸ்லாமின் நிலையை உயர்த்தும் முயற்சிகளைத் தவிர்த்து, ஹலால் தொடர்பிலான விவகாரங்களை ஆதரிக்கும் மலேசியாவின் ஈடுபாட்டையும் அன்வார் மறுஉறுதிப்படுத்தினார்.
“அச்சந்திப்பில், பிரேசிலில் இஸ்லாமிய சமய மேம்பாடு குறித்து எங்களால் கலந்துரையாடவும் கருத்துகளை பரிமாறிக் கொள்ளவும் முடிந்தது” என்று, ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஒரே பள்ளிவாசலான எல் நூரில் நடந்த அச்சந்திப்புக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது அன்வார் தெரிவித்தார். போர்த்துகீசிய மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு சிறப்பாக அச்சிடப்பட்ட குர்ஆன் மற்றும் 10 கூடுதல் பிரதிகளை அந்த பள்ளிவாசலுக்கு அன்வார் வழங்கினார்.பள்ளிவாசலின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கான முயற்சிகளை மலேசியாவும் திரட்டும் என்று அன்வார் தெரிவித்தார்.
பெரு நாட்டுத் தலைநகர் லிமாவில் நடந்த ஏபெக் பொருளாதாரத் தலைவர்கள் வார மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர், பிரேசிலுக்கான தமது முதலாவது பயணத்தை மேற்கொண்டு அன்வார் கடந்த சனிக்கிழமை ரியோ டி ஜெனிரோ வந்தடைந்தார். பிரேசிலிய அதிபர் லூய்ஸ் இனாசியோ லுலா டி சில்வாவின் அழைப்பை ஏற்று அன்வார் ரியோ டி ஜெனிரோ வந்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *