இன்னும் 25 நாட்களில் லாக்டவுன் - பரிதாப நிலையில் பாகிஸ்தான்!
- Muthu Kumar
- 07 Mar, 2026
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால் வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம், அண்டை நாடான பாகிஸ்தானைப் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இனி வாரந்தோறும் மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உடனடியாக விலையை உயர்த்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க, கொரோனா காலத்தைப் போல மீண்டும் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவர பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி,அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு 'வீட்டிலிருந்தே பணி' முறை. மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள். வாகனப் பகிர்வு முறையைப் பின்பற்றுதல் போன்ற திட்டங்கள் அடங்கிய தேசியச் செயல் திட்டம், பிரதமரின் ஒப்புதலுக்குப் பிறகு அடுத்த வாரம் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. தற்போது ஈரானின் தாக்குதலால் இந்தப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் பாகிஸ்தானிற்கு எண்ணெய் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக, செங்கடல் வழியாக எண்ணெய் விநியோகத்தைத் தொடருமாறு சவுதி அரேபியாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானின் தற்போதைய நிலவரப்படி, சுமார் 5 லட்சம் டன் பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளது. இது பெட்ரோலுக்கு 26 நாட்களுக்கும், டீசலுக்கு 25 நாட்களுக்கும் மட்டுமே போதுமானது. இதனால் அந்நாட்டு நிதியமைச்சர் முகமது ஔரங்கசீப், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) அவசர ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



