ஜொகூர் தேர்தல் மலாய் ஒற்றுமையின் சக்தியை நிரூபித்தது – டாக்டர் மகாதீர்
- Shan Siva
- 16 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 16: ஜொகூர் மாநிலத் தேர்தல் முடிவுகள், மலாய்காரர்களின் அரசியல் ஒற்றுமை மீண்டும் அவர்களுக்கான அரசியல் வலிமையை உருவாக்க முடியும் என்பதற்கான சான்றாக அமைந்துள்ளதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
தேர்தலின்போது ஏற்பட்ட ஒத்துழைப்பு முழுமையாக தெளிவாக இல்லாவிட்டாலும், அது மலாய் அரசியல் சக்தியை ஒருங்கிணைக்கும் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, மலாய் ஒற்றுமையால் கிடைக்கும் அரசியல் வலிமையை தவறான செயல்களை நியாயப்படுத்தவோ அல்லது பாதுகாக்கவோ பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், அந்த வலிமை மற்ற இன மக்களின் உரிமைகளையும் நலன்களையும் பறிப்பதற்காக அல்ல; மாறாக, அனைவரின் உரிமைகளையும் மதிக்கும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் மகாதீர் கேட்டுக்கொண்டார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஜொகூர் மாநிலத் தேர்தலில், பாரிசான் நேஷனல் போட்டியிட்ட 56 தொகுதிகளில் 48 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.
தேர்தலுக்கு முன், PAS கட்சி, பெரிகாத்தான் நேஷனல் போட்டியிடாத தொகுதிகளில் அம்னோ அல்லது பாரிசான் நேஷனல் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்குமாறு தனது உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
மேலும், PAS தலைவர் அப்துல் ஹாடி அவாங், மலாய்-முஸ்லிம் அரசியல் அதிகாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், எளிய பெரும்பான்மையைப் பெற முடியாவிட்டால் மாநில அரசை அமைப்பதற்கு பாரிசான் நேஷனலுக்கு ஆதரவு அளிப்பதாகவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், மலாய்காரர்கள் அரசியல் ரீதியாக ஒன்றுபட்டு வலுவாக இருக்கும் போது, மற்ற இனங்களின் உரிமைகளை கேள்விக்குட்படுத்தாமல், மலாய் சமூகத்தின் நலன்களை முன்னெடுக்கும் மனப்பான்மை உருவாகும் என்றும், சுதந்திரம் பெற்ற காலம் முதல் இந்தக் கொள்கையே நாட்டின் அனைத்து மக்களுக்கும் முன்னேற்றத்தை ஏற்படுத்த உதவியதாகவும் டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



