பூமியைத் தாக்கும் சூரிய புயல் - ஸ்தம்பிக்கப் போகிறதா தகவல் தொழில்நுட்பம்? - இஸ்ரோ!
- Muthu Kumar
- 06 Feb, 2026
சமீபத்தில் சூரியனின் 'ஆக்டிவ் ரீஜியன் 14366' என்ற பகுதியில் இருந்து மிகப்பெரிய வெடிப்புகள் (Solar Flares) ஏற்பட்டுள்ளன. பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நிகழ்ந்த இந்த அதிரடி மாற்றங்களால், இப்போது ஒட்டுமொத்த உலகமும் வானத்தை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.
இஸ்ரோ மற்றும் நாசா வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, இந்த சூரியப் புயலால் பூமியின் அயனோஸ்பியர் (Ionosphere) வளிமண்டலம் பாதிக்கப்படக்கூடும். இதன் விளைவாக,உங்கள் மொபைல் போன் சிக்னல் திடீரென மாயமாகலாம்.டிவி & ரேடியோ போன்ற ஒளிபரப்பு சேவைகளில் பெரும் தடங்கல் ஏற்படலாம். ஜி.பி.எஸ் (GPS) தொழில்நுட்பத்தை நம்பி இயங்கும் விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து திசைமாறவோ அல்லது முடங்கவோ வாய்ப்புள்ளது.
இந்த ஆபத்தை முன்கூட்டியே கண்டறிந்து நம்மை எச்சரிப்பதில் இந்தியா ஒரு படி மேலே இருக்கிறது. பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்தியாவின் 'ஆதித்யா-எல்1' (Aditya-L1) விண்கலம், சூரியனை ஒரு விநாடி கூட இமைக்காமல் கண்காணித்து வருகிறது.
"50-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், அதைச் சமாளிக்க அவசரத் திட்டங்கள் தயார் நிலையில் உள்ளன," என்கிறார் இஸ்ரோவின் தந்தி அளவீடு மற்றும் கண்காணிப்பு மைய இயக்குநர் அனில் குமார்.
சூரியப் புயல்கள் என்பது விண்வெளியில் நடக்கும் இயற்கையான நிகழ்வுதான். இருப்பினும், இன்றைய டிஜிட்டல் உலகில் நாம் தொழில்நுட்பத்தைச் சார்ந்து இருப்பதால், இந்த பாதிப்புகள் நம் அன்றாட வாழ்க்கையைச் சற்று சீர்குலைக்கலாம்.
விண்வெளியில் இருந்து வரும் இந்த 'மின்னல் வேக' அலைகளைச் சமாளிக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் இரவு பகலாகப் பணியாற்றி வருகின்றனர். தொழில்நுட்பம் தற்காலிகமாகத் தடைப்பட்டாலும், மக்களின் பாதுகாப்பிற்கு எந்தக் குறையும் வராது என்பதே தற்போதைய நிம்மதியான செய்தி
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



