சென்னைக்குள் ஊடுருவிய நவோனியா கொள்ளை கும்பல் போலீஸ் எச்சரிக்கை!
- Muthu Kumar
- 09 Sep, 2025
சென்னையில் நவோனியா கும்பல் களமிறங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என அதிகம் கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் நூதன முறையில் திருட்டில் ஈடுபடும் நவோனியா கும்பல் சென்னை நகரத்தில் புகுந்துள்ளதாகவும், அவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
தமிழகத்தில் ரயில் நிலையங்களில் உஷார் நிலை ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சென்னையில் முக்கிய ரயில் நிலையங்களான எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உஷார் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நவோனியா கும்பல் களமிறங்கியுள்ளதாக கூறியுள்ளனர். வட மாநில கொள்ளையர்களான இவர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் மக்களிடம் நகை, பணம், செல்போன் கொள்ளையடித்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதேபோல் தனியாக செல்லும் நபர்களை குறிவைத்தும், அவர்களிடம் பணம் பறிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
நவோனியா என்ற வடமாநில கும்பலை பொறுத்தவரை, பொதுமக்கள் எங்கெல்லாம் அதிகம் கூடுகிறார்களோ அங்குதான் அதிகம் கைவரிசை காட்டுவதாக போலீசார் தெரிவித்துள்ளார். ரயில்வே போலீசார் மட்டுமின்றி உள்ளூரி போலீசாரும் நவோனியா கும்பல் சென்னையில் களமிறங்கியுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தை இருப்பிடமாக கொண்டவர்கள்தான் இந்த நவோனியா கும்பல்.
மக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள், பெரிய பெரிய ஷாப்பிங் கடைகள் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போது திருட்டில் ஈடுபடுகின்றனர். சிறு, சிறு குழுவாக பிரிந்து சென்று இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திருடிய பொருட்களை உடனே விற்றுவிடுகிறார்கள். ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ என குறிப்பிட்ட நாட்கள் இங்கு தங்கி இந்த திருட்டு வேலைகளை செய்கிறார்கள்.
ஓரளவும் பணம் கிடைத்ததும் மீண்டும் சொந்த ஊருக்கு சென்று விடுகிறார்கள். இப்படியாக பல்வேறு பெருநகரங்களில் தங்கி இதுபோன்று திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறார்கள். பெங்களூர், விஜயவாடா, ஹவுரா, சென்னை என பல்வேறு நகரங்களில் மக்களிடம் நகை, பணத்தை திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். சென்னையில் மெரினா கடற்கரை அருகே கடந்த 31 ஆம் தேதி மீன் வாங்கிக்கொண்டிருந்த ஒருவரிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பணம் திருடிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மெரினா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் கடந்த 6 ஆம் தேதி 3 பேரை கைது செய்தனர். கைதானவர்கள் மீது ஏற்கனவே ரயில்வே போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று மாம்பலம் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர் அருகே ரயில் பயணியிடம் செல்போன் திருட முயன்ற அதே கும்பலை சேர்ந்த மற்றொருவரையும் ரயில்வே போலீசார் கைது செய்து இருந்தனர்.
எனவே இந்த கும்பல் அடுத்தடுத்து நகை, பணம், செல்போன் திருடும் செயலில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாகவும், அதிக அளவு மக்கள் நடமாடும் பகுதிகளில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். நவோனியா கும்பலில் தற்போது வரை 4 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்றும் மக்கள் இந்த கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



