அரசாங்கக் கொள்முதலில் நிகழும் அரசியல் தலையீடுகள்,இப்போது ஒரு குற்றமாகும்!
- Muthu Kumar
- 01 Sep, 2025
கோலாலம்பூர், செப். 1-
அரசாங்கக் கொள்முதல் நடவடிக்கைகளில் அரசியல் தலையீடு இருக்குமேயானால் அது ஒரு குற்றச் செயலாக இருக்கும் என்று. அண்மையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசாங்கக் கொள்முதல் மசோதா வகைப்படுத்தி இருக்கிறது.அதோடு, அரசாங்கக் கொள்முதல்கள் மீதான முடிவுகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவும் அம்மசோதா அனுமதி அளிப்பதாக, பிகேஆர் இளைஞர் பிரிவு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் கொள்முதல்களில் அரசியல் ரீதியில் யாராவது தலையிட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக அதிகபட்சம் 5 லட்சம் வெள்ளி அபராதம் அல்லது ஐந்தாண்டு வரைக்குமான சிறை தண்டனை விதிக்க அம்மசோதா வழிவகுக்கிறது என்று அப்பிரிவின் சட்ட மற்றும் பொதுப் புகார் பிரிவின் தலைவர் கைருல் நைய்ம் ரஃபிடி கூறியுள்ளார்.
குத்தகை மற்றும் அனுகூல நலன் அறிவிப்புகளுக்குத் தேவையான, பொது டெண்டர்களுடன் கூடிய பெருந்திட்டங்கள் என்று வரும்போது, அதன் மீது அதிக மேற்பார்வை செய்யப்படுவதற்கும் இந்த மசோதா அனுமதி அளிக்கிறது. பொருள் விநியோகங்களும் அவசியம் பதிவு செய்யப்பட வேண்டும்.“இதன் தொடர்பிலான மேல்தகவல்கள் மைபுரோகியூமெண்ட் அகப்பக்கத்தில் வெளியிடப்படும்" என்று, நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கைருல் நைய்ம் தெரிவித்தார்.
பரிந்துரைக்கப்பட்டுள்ள ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றம், சுதந்திரமாக செயல்பட முடியாத ஒன்று என்று கூறப்படுவதையும் அவர் மறுத்துள்ளார்."இந்த நீதிமன்றம் இதற்கு முன்பு இல்லாத ஒரு முறையான மறுஆய்வு வழிமுறையை அறிமுகப்படுத்துகிறது.இது தெளிவான சட்ட கட்டமைப்பிற்குள் கொள்முதல் முடிவுகளை எதிர்க்க வெளித் தரப்பினர்களையும் அனுமதிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
இந்த மசோதா மக்களைவை வழியாக அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டு வருவதையும் கைருல் நைய்ம் மறுத்தார்.கடந்த 2024ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டபோதே இந்தப் பரிந்துரைக்கப்பட்ட சட்டம் அதில் அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார். இம்மசோதா இம்மாதம் 25ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு நான்காவது நாளில் அதாவது 28ஆம் தேதி மக்களவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய தினம் மக்களவையிலிருந்து வெளிநடப்பும் செய்திருந்தனர்.
அதோடு, இச்சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவதற்காக, மக்களவையினால் அங்கீகரிக்கப்படுவதை ஒத்தி வைக்குமாறு பொது அமைப்புகளிடமிருந்து கோரிக்கைகளும் எழுந்தன. மக்களவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இம்மசோதா மேலவைக்குக் கொண்டு செல்லப்பட விருக்கிறது. மேலும், அம்மசோதா சட்டமாவதற்கு முன்னர் அரச அங்கீகாரத்தைப் பெறவேண்டியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



