கல்லூரி மாணவி கொலை வழக்கு! குற்றவாளி இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
- Shan Siva
- 12 May, 2026
கிளந்தான், மே 12: கிளந்தானின்
கெத்தெரே பகுதியில் 61 கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட 19 வயது
கல்லூரி மாணவி நூர்ஃபிஸ்யா சுல்கிப்லியின் கொலை வழக்கில், இளம் வயது
சந்தேக நபர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இதை உறுதிப்படுத்திய கிளந்தான்
காவல்துறைத் தலைவர் யூசோஃப் மமாட்,
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ்
குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி
வெளியிட்டுள்ளது.
விசாரணையில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு
சந்தேக நபர், காவல்துறை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
19 வயதான இந்த இரண்டு சந்தேக நபர்களின்
ஏழு நாள் நீதிமன்றக் காவல் உத்தரவு மே 8-ஆம் தேதி முடிவடைந்ததை அடுத்து, மேலும் ஏழு
நாட்களுக்கு அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
முக்கிய சந்தேக நபர் மீது மே 7-ஆம்
தேதி நூர்ஃபிஸ்யாவின் கொலைக்காக குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என முதலில்
எதிர்பார்க்கப்பட்டது.
கொலைக்குப் பின்னணியில் பொறாமையே
காரணமாக இருக்கலாம் என நம்பப்படுவதாக யூசோஃப் முன்னதாகக் கூறியிருந்தார்.
மே 1 ஆம் தேதி சடலம்
கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து,
கெத்தரேவில் இரண்டு வெவ்வேறு இடங்களில்
நடத்தப்பட்ட சோதனைகளில், இரண்டு முதியவர்கள் உட்பட மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை
காவல்துறை கைது செய்தது. அந்த முதியவர்கள் மூன்று நாட்களுக்கு நீதிமன்றக் காவலில்
வைக்கப்பட்டனர்.
மேலும், இந்தச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக
நம்பப்படும் ஒரு கத்தி, இரண்டு கார்கள், இரண்டு கைபேசிகள், ஒரு செட் உடைகள் மற்றும் ஒரு ஜோடி செருப்புகள் உள்ளிட்ட பிற
பொருட்களையும் காவல்துறை பறிமுதல் செய்தது.
பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு
கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவியான நூர்ஃபிஸ்யா, வேறொரு இடத்தில் கொல்லப்பட்டு, பின்னர் அவரது
சடலம் கெத்தரேவில் உள்ள காம்பங் சிமா என்ற இடத்தில் ஒரு நெல் வயலுக்கு அருகே
வீசப்பட்டதாக நம்பப்படுகிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



