மாநகர் மன்ற உறுப்பினராக ஒருநாள் பினாங்கில் இளைஞர்களுக்கான உத்வேக பயிலரங்கம்!
- Muthu Kumar
- 29 Jun, 2025
(ஆர்.ரமணி)
பினாங்கு, ஜூன் 29-
பினாங்கு மாநகராட்சியின் பொதுக் கல்விப் பிரிவு ஏற்பாட்டில் பாடாங் கோத்தா லாமா சாலை நகர மண்டபத்தில் "மாநகர் மன்ற உறுப்பினராக ஒரு நாள்" என்றத் தலைப்பில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி, இதில் கலந்து கொண்ட, மாநில இளைஞர் மேம்பாட்டு கழகத்தின் சுமார் 40 இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் உற்சாகப் பயிலரங்கமாக உவகையில் ஆழ்த்தியது.
பினாங்கு மாநகர் மன்ற உறுப்பினர்களும் திரளாகப் பங்கேற்றிருந்த இந்த பயிலரங்கத்தில், அப்பொறுப்பினை வகிப்பவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகளைச் சார்ந்த கோட்பாடுகளும், செயல்திறன் அம்சங்களும் பொறுப்புகளின் நுணுக்கங்களும் எவ்வாறிருத்தல் அவசியம் என்பதை நன்கு விளக்கமளிக்கும் ஒரு
விவாதக் களமாகவும் இது நடத்தப்பட்டது.
இளைஞர்கள் உள்ளூர் அரசாங்க நிர்வாக அமைப்பை ஆழமாகப் புரிந்து கொள்வதற்கு ஒரு நல்வாய்ப்பை வழங்கும் நிகழ்ச்சியாகவும் இதன் மூலம் சமூகத்திற்கான சேவையின் தரத்தை திட்டமிடவும் மதிப்பீடு செய்து மேம்படுத்தவும் மாநகர் மன்ற உறுப்பினர்கள் ஆற்றும் பொறுப்புகளுடன் ஒத்ததாக இந்தப் பயிலரங்கம் அமைந்திருந்த வேளையில், புதிய வகை பொதுநலத் திட்டங்களை அமல்படுத்தும் தூர நோக்கு சிந்தனைகளைப் பேணுவதற்கான ஒரு தளமாகவும் அமைந்தது.
இந்தப் பயிலரங்கம் இதன் பங்கேற்பாளர்களுக்கு நன்மை பயத்தது.சமூகப்பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கு சுமுகத்தீர்வு காணும் வழிமுறைகளை ஆராய்வதோடு, சமூகத்தினர் மத்தியில் தலைதூக்குகின்ற பொதுப் பிரச்சினைகள் குறித்த விவரங்களை அறிந்து, உடனுக்குடன் களையெடுப்பதற்கான விவேகத் திறனும் சமயோசிதமும் சார்ந்த உத்திகளைக் கற்று தக்க சேவையாற்றும் அம்சங்கள் இதன் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பாடங்களாக இந்தப் பயிலரங்கம் உணர்த்தி உதவியதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் பயிலரங்கம் மாநில மாநகராட்சி மேயர் டத்தோ அ.ராஜேந்திரன் தலைமையில் நடத்தப்பட்ட வேளையில், மாநில உள்ளாட்சி மற்றும் நகரப் பெருந்திட்டத் துறையின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹிங் மூய் லாய் மற்றும் மாநில இளைஞர் விளையாட்டு மற்றும் சுகாதாரப் பிரிவுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூய ஆகிய இருவரும் சிறப்புப் பிரமுகர்களாக பங்கேற்பதற்கு வழியேற்படுத்தியது.
இந்தப் பயிலரங்கத்தில் பொதுக் கல்விக்கானப்பிரிவின் தலைவராகப் பொறுபேற்றுக் கொண்ட மாநகர் மன்ற உறுப்பினர் பென்ஜி ஆங் மிங் குவான் தனது வரவேற்புரையில் இந்த பயிலரங்கத் திட்டம் ஒரு சிறப்பான ஏற்பாடு என்றும், பினாங்கு மேம்பாட்டுக் கழக இளையோர் குழுவுடன் இணைந்து பணியாற்றும் ஓர் உறவுப் பாலமாக இஃது விளங்குவது தொடர்பில் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
மாநில நிர்வாக அமைப்புகளையும் மாநகர் மன்ற நடவடிக்கைகளையும் இதுவரையில் ஒரு கண்ணோட்டப் பார்வையுடன் நோக்கி வந்த இந்தப் பயிலரங்கப் பேராளர் குழுவினர், இவ்விரு தரப்புகளின் விலாவாரியான நிர்வாகக் கூறுகளில் ஊடுருவி, ஒவ்வொருப் பிரிவுகளுக்கான நிர்வாக நுணுக்கங்களை அறிந்து, எதிர்வரும் காலங்களில் தங்கள் ஈடுபாடுகளில் இவற்றை கடைப்பிடித்து செயலாற்றுவதற்கு இது ஒரு தூண்டுகோலாக துணை நிற்பது திண்ணமென்று ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூய் வாழ்த்துரைத்தார்.
Program "Sehari Sebagai Ahli Majlis" di Padang Kota Lama anjuran MBPP memberi inspirasi kepada 40 belia, mendedahkan mereka kepada struktur pentadbiran kerajaan tempatan dan menyemai semangat tanggungjawab sosial serta perancangan dasar awam untuk masa depan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



