மசீசவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை-லோக்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 15

2022ஆம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சீன வாக்காளர்களுக்கு தமது கட்சி துரோகம் செய்துவிட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மசீசவுடன் தற்போது ஏற்பட்டுள்ள “வாய்ச் சண்டை” குறித்து கருத்துரைக்க ஜசெக தலைமைச் செயலாளர் லோக் சியூ ஃபூக் மறுத்துவிட்டார்.

மசீசவின் குற்றச்சாட்டு குறித்து தாம் கவலைப்படப் போவதில்லை என்றும் அக்கட்சியின் கருத்துகளுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என்றும் லோக் கூறியதாக சினார் ஹரியான் தெரிவித்தது."நாங்கள் எங்கள் வேலையை மட்டும் செய்வோம். மக்களே எங்களின் சேவையை மதிப்பீடு செய்யட்டும். மசீச எங்களை மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. அது அவர்களின் வேலையும் அல்ல.

"எங்களை மதிப்பீடு செய்ய வேண்டியவர்கள் வாக்காளர்களும் மக்களும்தான். தேர்தல் வரும்போது அதை நாங்கள் பார்ப்போம்" என்று லோக் தெரிவித்ததாக கூறப்பட்டது.
சீன சமூகத்தின் நலன்களைத் தற்காப்பதில் ஜசெக தோல்வியுற்றிருப்பதாக மசீச இளைஞர் பிரிவின் தகவல் பிரிவுத் தலைவர் நியோ சூ சியோங் கடந்த வியாழக்கிழமை குற்றஞ்சாட்டிய பின்னர் அவ்விரு கட்சிகளுக்கும் இடையில் “வாய்ச் சண்டை" ஏற்பட்டுள்ளது.

சீனர்களைப் பாதிக்கச் செய்து வரும் பல விவகாரங்கள் குறித்து ஜசெக மௌனமாக இருந்து வரும் போக்கினாலும் சீனர்கள் ஏமாற்றம் அடைந்திருப்பதாக, நியோவ் கூறியிருந்தார்.நியோவின் இத்தகைய குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று கூறி அதை நிராகரித்த ஜசெக உதவித் தலைவர் ஷரெட்ஸான் ஜொஹான், பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவது மீது கவனம் செலுத்துமாறு மசீசவுக்கு அறிவுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *