தொகுதிக்கான மானிய விவகாரம்:எதிர்க்கட்சி எம்பிக்கள் முதலில் ஒருமித்த கருத்தை கொண்டிருக்க வேண்டும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 6-

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மானிய ஒதுக்கீடு குறித்து அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதற்கு முன்னர், அவர்கள் அனைவரும் தங்களுக்கு இடையிலான மாறுபட்ட கருத்துகளை முதலில் அவசியம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் ப்ராஹிம் கோரியிருக்கின்றார்.

இதன் தொடர்பில் பேச்சு நடத்த அரசாங்கம் இன்னமும் தயாராக இருப்பதாகவும் பேச்சுக்களை நடத்துவதற்காக அரசாங்கத் தரப்பில் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோப் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், மக்களவையில் நேற்றைய பிரதமரின் கேள்வி நேரத்தில் பேசும்போது அன்வார் தெரிவித்தார்.

"ஆனால், பேச்சுக்களை நடத்துவதற்கு முன்னர் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலில் அவர்களுக்கிடையில் அவசியம் ஓர் இணக்கப் போக்கை காண வேண்டும்."இப்போதைக்கு, அவர்கள் மத்தியில் எந்த ஓர் இணக்கப் போக்கும் காணப்படவில்லை.

சிலர் மானியத்தை விடும்புகின்றனர். சிலர் பேச்சுக்களை நடத்த ஒப்புக் கொள்கின்றனர். சிலர் மறுக்கின்றனர் என்று, பெரிக்காத்தான் நேஷனலின் ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஷஹிடான் காசிம் இந்த விவகாரத்தை எழுப்பியபோது அன்வார் இதனைத் தெரிவித்தார்.

எனினும், பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலில் தங்களுக்கு இடையிலான மாறுபட்ட கருத்துகளுக்குத் தீர்வு காண கலந்து பேச வேண்டும் என்ற அன்வாரின் கோரிக்கையை ஒப்புக் கொள்ளாத எதிர்க்கட்சித் தலைவரும் லாருட் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹம்ஸா ஸைனுடின், இந்த விவகாரம் தொடர்பில் அன்வாரை தாம் நேரடியாக சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி எம்பிக்களுக்கான மானியம் குறித்த பேச்சுக்களை ஃபடில்லாதான் கையாள்வார் என்று அதற்கு தீர்க்கமாக பதிலளித்த அன்வார், ஒருவேளை விரிவான தேசிய விவகாரங்கள் சம்பந்தப்பட்டிருந்தால் அது குறித்து கலந்து பேச ஹம்ஸாவை சந்திப்பதில் தமக்கு பிரச்சினை ஏதும் இல்லை என்றார்.

"சந்திக்க நான் தயாராக இருக்கின்றேன். ஆனால்,அது தொகுதிக்கான மானியம் சம்பந்தப்பட்டதாக இருந்தால், அது குறித்து இரண்டாவது துணைப் பிரதமருடன்தான் பேசவேண்டும். ஆனால், தேசிய விவகாரங்களாக இருந்தால் மட்டுமே ஹம்ஸாவை சந்திப்பதில் எனக்கு ஆட்சேபம் ஏதும் இல்லை என்று நிதி அமைச்சருமான அன்வார் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மானிய விவகாரம் இன்னும் தீர்க்கப்படாமலேயே இருந்து வருகிறது. இதன் தொடர்பில் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி தரப்பினர் இன்னமும் எந்த ஓர் உடன்பாட்டையும் காணவில்லை.

அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அதே மானியத்தை எதிர்க்கட்சி எம்பிக்களுக்கும் வழங்க அன்வார் இணக்கம் தெரிவித்திருந்தாலும், அதன் தொடர்பில் பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டும் என்று கோரப்படுகிறது.இம்மானியம் தொடர்பில் அரசாங்கம் வழங்கி இருந்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் பெரிக்காத்தான் நேஷனல் இதற்கு முன்னர் நிராகரித்திருந்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *