சுங்கை மங்கீஸ் தமிழ்ப் பள்ளிக்கான புதிய பாலம் நிர்மாணிப்பு!
- Muthu Kumar
- 26 Sep, 2025
(எஸ்.எஸ்.மணிமாறன்)
பந்திங், செப்.26-
இங்கு, அதிகமான மாணவர்கள் கல்வி பயின்று வருவதைக் கருத்தில் கொண்டு அவர்களின் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்கும் நடவடிக்கையில் சுங்கை மங்கீஸ் தமிழ்ப்பள்ளிக்கான புதிய பாலம் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருவதாக மனித வள மக்கள் நலப்பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமான் தெரிவித்தார்.
பள்ளியை ஒட்டியுள்ள பெரிய கால்வாயை மாணவர்கள் கடந்து செல்ல கடந்த காலங்களில் அமைக்கப்பட்டு இருந்த நடைப்பாலத்தின் தரம் மிகவும் குறைந்த நிலையில் இருப்பதை பள்ளி நிர்வாகத்தினர் தமது கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
இதைக் கருத்தில் எடுத்துக் கொண்டு மாவட்ட வடிகால் நீர் பாசன அதிகாரி பொறியியலாளர் ஹஸ்ருல் ஹிஷாம் அப்துல்லாவின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் தற்போது அதற்கான புதிய பாலம் நிர்மாணிப்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டு நிறைவு பெறும் நிலையில் இருப்பதாக பாப்பா ராய்டு கூறினார்.
நேற்று காலையில், வடிகால் நீர் பாசன இலாகா அதிகாரிகள், பந்திங் சட்டமன்ற மக்கள் சேவை மையத்தின் உயர் அதிகாரி கண்மணி பெரியண்ணன், கோலலங்காட் நகராண்மைக்கழக உறுப்பினர் நடேசன் சுப்ரமணி ஆகியோருடன் பள்ளிக்கான புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட வருகை தந்த அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
சுங்கை மங்கீஸ் தமிழ்ப் பள்ளியின் புதிய பாலம் பூர்த்தி அடைந்ததும் இவ்வட்டாரத்தில் மக்கள் குடியிருப்புப்பகுதியில் வசித்து வரும் இந்திய பெற்றோர்கள் தத்தம் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைக்கும் போது இனி வரும் காலங்களில் அச்சமின்றி அனுப்பி வைக்கலாம் என்று பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு உறுதி அளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



