ஹமாஸை காட்டிலும் மிகத் தீவிரமாக நடந்து கொள்ள வேண்டாம்!
- Muthu Kumar
- 07 Oct, 2025
கோலாலம்பூர், அக்.7-
ஹமாஸ் இயக்கத்தினர் பின்பற்றாததைக் காட்டிலும், மிகத் தீவிரமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று. பெர்சத்து கட்சியின் வான் அஹ்மாட் ஃபைசாலுக்கு துணை வெளியுறவு அமைச்சர் முஹமட் அலாமின் நினைவுறுத்தியுள்ளார்.
இம்மாத இறுதியில் கோலாலம்பூரில் நடைபெற விருக்கும் 47ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்திருப்பதற்கு எதிரான தமது கோபத்தை அஹ்மாட் ஃபைசால் நேற்று வெளிப்படுத்திய பின்னர் அவருக்கு அலாமின் இத்தகைய நினைவுறுத்தலை வெளியிட்டார்.
"மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினரான அஹ்மாட் ஃபைசால், "ஹமாஸைவிட மிகத் தீவிரமாக நடந்து கொள்ளக் கூடாது" என்றும் அலாமின் கூறியுள்ளார்."காஸாவில் இனப் படுகொலைக்கு" அனுமதித்த ஒரு “போர்க் குற்றவாளி” என்று டிரம்பை அழைத்த ஃபைசால், ஆசியான் மாநாட்டுக்கு டிரம்பை அழைத்திருக்கும் அரசாங்கத்தின் முடிவு குறித்து கேள்வி எழுப்பினார்.
"ஓர் அமெரிக்க அதிபர் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தி இருக்கின்றார். ஆனால், இனப் படுகொலை நடக்க டிரம்ப் மட்டும்தான் அனுமதி அளித்துள்ளார். நமது நாட்டில் டிரம்ப் கால் பதிப்பதனால் நமக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது" என்று ஃபைசால் கேள்வி எழுப்பி இருந்தார்.அதற்கு பதிலளித்த அலாமின், இந்த விவகாரத்தை மலேசியா ஒரு பரந்த கண்ணோட்டத்திலிருந்து அவசியம் பார்க்க வேண்டியுள்ளது.
ஆசியானின் தலைவர் எனும் மலேசியாவின் தகுதி அடிப்படையில்தான் கோலாலம்பூர் வருமாறு டிரம்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் மலேசிய அரசாங்கம் இத்தகைய அழைப்பை அவருக்கு விடுக்கவில்லை என்றும் அவர் பதிலளித்தார்.அதோடு, மலேசியாவின் முக்கிய வெளிநாட்டு முதலீட்டாளராகவும் அமெரிக்கா தொடர்ந்து இருந்தும் வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
"டிரம்பின் 20 அம்சத் திட்டத்தை ஹமாஸே வரவேற்றிருக்கிறது. ஆதலால், அதை ஏன் நம்மால் ஆதரிக்க முடியாது? மாச்சாங், "ஹமாஸைவிட மிகத் தீவிரமாக நடந்து கொள்ள வேண்டாம்" என்று அலாமின் கேட்டுக் கொண்டார்.
கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி அறிவிக்கப்பட்ட டிரம்பின் திட்டம், காஸா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறும் மனிதாபிமான உதவிகள் கொண்டு செல்லப்படும் சாலைகளைத் திறக்குமாறும் கேட்டுக் கொண்டிருந்தது என்று அவர் தெரிவித்தார்.காஸா மீதான எத்தகைய குண்டு வீச்சு நடவடிக்கையையும் முடிவுக்குக் கொண்டு வரும் திட்டத்தை மலேசியா ஆதரிக்கும் என்றும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



