புதிய இபிஎஃப் உறுப்பினர்களுக்கு மட்டுமே மாதாந்திர பணமீட்பு வாய்ப்பு-துணையமைச்சர் விளக்கம்!
- Muthu Kumar
- 08 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 8-
ஊழியர்கள் சேமநிதி வாரியத்தின் (இபிஎஃப்) சந்தாதாரர்களுக்குப் பென்ஷன் பாணியிலான மாதாந்திர அடிப்படையில் பண மீட்புத் திட்டத்தை அமல்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. ஆனால், அத்திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு பதிவு செய்துகொள்ளும் புதிய சந்தாதாரர்களுக்கு மட்டுமே அத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று துணை நிதியமைச்சர் லிம் ஹூய் இங் மக்களவையில் நேற்று தெரிவித்தார்.
ஆயினும், தற்போதைய இபிஎஃப் உறுப்பினர்கள் தாங்கள் விரும்பும் பட்சத்தில் இப்புதிய திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம் என்று அவர் விளக்கினார்.மக்களின் வாழ்நாள் காலம் அதிகரித்துவரும் வேளையில், இபிஎஃப் உறுப்பினர்களின் அன்றாட செலவுக்கான சேமிப்புத் தொகை போதுமான அளவுக்கு இருக்க வேண்டும். அதனை உறுதிசெய்வதுதான் இப்புதிய பணமீட்புத் திட்டத்தின் நோக்கமாகும். ஓர் உறுப்பினர் குறைந்தப்பட்ச பணிஓய்வு வயதை அடைந்தவுடன் அப்புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று அவர் குறிப்பிட்டார்.
சேமிப்புக் கணக்கை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை தளர்வுக் கணக்கு, வருமானக் கணக்கு என இருவகைப்படும். தளர்வுக் கணக்கில் உள்ள பணத்தை தங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் உறுப்பினர்கள் மீட்டுக் கொள்ளலாம்.
வருமானக் கணக்கில் உள்ள பணத்தை அது முடியும் வரையில் தவணை முறையில் அல்லது மாதாந்திர அடிப்படையில் மீட்டுக் கொள்ளலாம் என்று லிம் விளக்கினார்.பணிஓய்வுக்கால வருமானத்தைப் பாதுகாப்பு நோக்கத்திலும் நிதி மேலாண்மையை மேலும் ஊக்குவிக்கும் நோக்கத்திலும் இப்பரிந்துரை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



