தேசியக் கொடி விவகாரங்களினால் தேமு-பக்காத்தான் உறவு சீர்குலைய வழிவகுத்துவிட வேண்டாம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 25-

ஒற்றுமை அரசாங்கத்தில் நிலவும் தேசிய முன்னணிக்கும் ஜசெகவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை சீர்குலைக்க தேசியக் கொடிகள் தலைகீழாக பறக்கவிடப்படும் சம்பவங்கள் அனுமதிக்கப்படக் கூடாது என்று, அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நூர் ஜஸ்லான் முஹமட் வலியுறுத்தியுள்ளார்.

ஆளும் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் உறுப்புக் கட்சிகள், இத்தகைய விவகாரங்களில் அரசியல் முதிர்ச்சித் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், தேசிய அரசியல் நிலைத்தன்மைக்கு குந்தகத்தை ஏற்படுத்த அத்தகைய சம்பவங்கள் அனுமதிக்கப்படக் கூடாது என்றார்.எனினும், இதுபோன்ற விவகாரங்களில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சாலேவுக்கு உரிமை இருப்பதாக அவர் தெரிவித்தார்.

"அவர் (அக்மால் சாலே) செய்வதில் தவறில்லை என்று நான் நம்புகிறேன். இதை யார் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ என்பது குறித்து நான் கவலைப்படவில்லை” என்று நூர் ஜஸ்லான் கூறினார்.ஜசெகவின் ஙா கோர் மிங்கும் வெளிப்படையாகப் பேசக் கூடியவராக இருக்கின்றார் என்று கூறிய அவர், "ஙாவும் இந்த விவகாரம் குறித்து குரல் கொடுத்துள்ளார். இப்போது அவர் அமைச்சராக இருக்கின்றார். ஆதலால், ஙாவும் ஜசெகவும் அமைதியாக இருக்க வேண்டும். அவர்கள் அக்மாலைப் போலவே இருக்கின்றனர்" என்றார்.

முன்னதாக நேற்று, நூர் ஜஸ்லானின் இத்தகைய கருத்து குறித்து பேசிய மலாக்கா மாநில ஜசெக இளைஞர் பிரிவுத் தலைவர் கேசல் கிருஷ்ணன், தேசியக்கொடி விவகாரத்தில் கையாளப்பட்டு வரும் ஒரு மலிவான அரசியல் தந்திரம். இதுவென்று வர்ணித்ததோடு இத்தகைய பேச்சுக்கள் சமூகத்தில் வெறுப்பைத்தான் தூண்டி விடும் என்றார்.

குழப்பத்தை ஏற்படுத்தும் மற்றும் தூண்டி விடக் கூடிய அறிக்கைகளை வெளியிட்டு வருவதற்காக, அக்மாலுடனான அரசியல் உறவை துண்டித்து விடுமாறு ஜசெக தலைமைத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.பினாங்கு, கப்பளா பத்தாஸில் உள்ள தமது கடைக்கு வெளியில் தேசியக் கொடியை தவறுதலாகப் பறக்க விட்டதாகக் கூறப்படும் ஒருவரின் கடையின் முன் அக்மால் தமது ஆதரவாளர்கள் சுமார் 200 பேருடன் அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் இம்மாதம் 11ஆம் தேதி தமது முகநூல் கணக்கில் பதிவேற்றம் செய்திருந்த ஒரு காணொளி தொடர்பில் அக்மால் மீது கப்பளா பத்தாஸ் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை குற்றம் சுமத்தப்பட்டது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *