பிரதமர் வேட்பாளர் விசயத்தில் “அவசரப்படாதீர்கள்-பெர்சத்துவுக்கு சனுசி கோரிக்கை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 9-

பிரதமர் வேட்பாளரின் பெயரை அறிவிப்பது உட்பட பெரிக்காத்தான் நேஷனலுக்கான முக்கிய அரசியல் முடிவுகளை எடுப்பதில் மிகவும் "அவசரப்பட வேண்டாம் என்று. கெடா மந்திரி பெசார் சனுசி நோர் பெர்சத்து கட்சியை வலியுறுத்தியுள்ளார்.

பெரிக்காத்தான் நேஷனலில் இடம் பெற்றிருக்கும் தனது பங்காளிக் கட்சிகளின் அங்கீகாரமின்றி, தனது சொந்தத்திற்கு அத்தகைய முடிவுகளை பெர்சத்து எடுக்க
முடியாது என்று, பாஸ் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநருமான சனுசி கூறியிருக்கின்றார்.

"சபா சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு மற்றும் மாநில முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்யும் விசயத்திலும் இது பொருந்தும். பெர்சத்து தனியாக அதிக உற்சாகத்துடன் இருக்கக்கூடாது என்பதே எனது கருத்து என்று நேற்று அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் 16ஆவது பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின்
பிரதமர் வேட்பாளராக, கட்சித் தலைவர் முஹிடின் யாசினை பெர்சத்துவின் அண்மைய பொதுப் பேரவை ஏகமனதாக தேர்வு செய்திருப்பதாக அக்கட்சியின் தலைமைச் செயலாளர் அஸ்மின் அலி அறிவித்திருந்தது குறித்து கருத்துரைக்கும்போது சனுசி இவ்வாறு பதிலளித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் பெரிக்காத்தான் கூட்டணியின் உறுப்புக் கட்சித் தலைவர்கள் மத்தியில் அவ்வப்போது கருத்துகள் எழுந்து வருகின்றன. பெரிக்காத்தான் கூட்டணியின் அதிகாரப்பூர்வ பிரதமர் வேட்பாளராக முஹிடின் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டு வந்ததை, கடந்த ஆண்டு நவம்பரில் மறுத்திருந்த பாஸ் கட்சியின் ஆன்மிகத் தலைவர் ஹஷிம் ஜாசின், பெரிக்காத்தான் கூட்டணியை பாஸ் கட்சியினால் வழிநடத்த முடியும் என்றார்.

எனினும். பெர்சத்து மற்றும் கெராக்கான் தலைவர்களில் பலர் முஹிடினுக்கான தங்களின் ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர். மத்திய அரசாங்கத்தை பெரிக்காத்தான் கூட்டணி கைப்பற்றிய பின்னரே, தனது பிரதமர் வேட்பாளர் யார் என்பதை பெரிக்காத்தான் முடிவு செய்யும் என்று, இவ்வாண்டு ஜூலை 29ஆம் தேதி ஹஷிம் கூறியிருந்தார்.

இந்நிலையில் சபா மாநில முதலமைச்சர் பதவிக்கான ஒரு வேட்பாளராக பெர்சத்து உதவித் தலைவர் ரொனால்ட் கியாண்டி இருப்பதற்கு தாம் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை என்றும் முஹிடின் தெரிவித்திருந்தார். எனினும், இந்த விவகாரம் பெர்சத்து தலைமைத் துவத்தினால் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அவர் கூறியிருந்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *