குப்பைகளில் அதிகமாக வீசப்படுவது உணவுப் பண்டங்களே-பினாங்கில் மறுசுழற்சி ஆய்வாளர் விளக்கவுரை!
- Muthu Kumar
- 27 Aug, 2025
(ஆர்.ரமணி)
பினாங்கு, ஆக. 27-
மலேசியர்களால் தினந்தோறும் வீசியெறியப்படும் குப்பைகளில் அதிகமாக தேங்குவது,உணவுப் பண்டங்களே என்று பினாங்கு மாநில மாநகர் மன்றத்தின் மறுசுழற்சி புலனாய்வாளர் சேவியர் செபஸ்தியான் இங்கு விளக்கவுரை நிகழ்த்தினார். மிதமிஞ்சுகின்ற பற்பல உணவு வகைகளை செய்வதறியாது இறுதியில், குப்பைத் தொட்டிகளில் வீசியெறியும் மக்கள் போக்கு இன்னமும் மாறாமல் தொடர்வது வேதனையானது என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று காலையில் இங்கிருக்கும் ஐலண்ட் பெண்கள் தொடக்கப் பள்ளியில் மறுசுழற்சி
குறித்தும், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் தொடர்பிலும் அவர் விளக்கவுரை நிகழ்த்தியபோது, உணவுப் பண்டங்களை வீணடிப்பதிலும், அவற்றை துச்சமென நினைத்து வீசுவதிலும் மலேசியர்களிடையே வேண்டாத பழக்கமாக இருக்கும் நிலை மாற வேண்டுமென்றும், தேவைக்கேற்ற வகையில் உணவுகளைக் கையாளும் வழிமுறையை நிலை நிறுத்துவதன் மூலம், இதனை தவிர்க்கலாமென்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
சுற்றுச்சூழல் மாசிலிருந்து மனிதர்களைக் காப்பதில் மறுசுழற்சி செயல்திட்ட முறை முக்கியப் பங்காற்றுவதோடு, இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும், இதன் அவசியம் இன்றைய காலத்திற்கு மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுவதாக, அவர் அறிவுறுத்தினார். பினாங்கு மாநிலத்தில் மறுசுழற்சிக்கான விவேகத் திட்டங்கள் 41.6 சதவிகித இலக்கை எட்டியிருப்பதாக, அவர் புள்ளி விவரமாக மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.
மறுசுழற்சியின் அவசியத்தையும்,அதனால் விளையும் பயன்பாட்டையும் தொட்டு சேவியர் நிகழ்த்தியப் பேருரை,இதனை செவிமடுத்த மாணவர்களுக்கு மட்டுமல்லாது. இப்பள்ளி ஆசிரியர்களுக்கும் தகுந்த படிப்பினையைத் தந்து விழிப்புணர்வைத் தூண்டியதோடு, வேறுபடுத்தப்படாமல் தினமும் வீசியெறியப்படும் திடக் கழிவுகளால் நிகழும் சீர்கேடுகளையும் அவலங்களையும் விவரித்ததுடன், இந்த அலட்சியப் போக்கிற்கு முடிவு கட்டுதல் அவசியமென்றும் வலியுறுத்தினார்.
மேலும் இல்லங்கள் தோறும் அப்புறப்படுத்தப்படும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயால் சாக்கடைகளும் இதர நீர் நிலைகளும் பெருமளவில் மாசுபட்டு வந்த அவல நிலைக்கு தகுந்ததொரு தீர்வு காணும் விதமாக, அதனை வேறுபடுத்தி தனித்து அப்புறப்படுத்துவதால், உபரி வருமானம் ஈட்டுவதற்கு வழிகாண முடியுமென்ற உபாயம் குறித்தும் விளக்கமளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



