24 மணி நேர உணவகங்களில் சுகாதாரம், தரம் ஆகியவற்றை பிரெஸ்மா உறுதிப்படுத்த வேண்டும்!
- Muthu Kumar
- 25 Dec, 2024
(டிகே.மூர்த்தி)
ஈப்போ, டிச. 25-
இந்திய முஸ்லிம் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளில் மாத்திரைகள் கலக்கப்படுகின்றன என்று சமூக (காணொளி) வலைத்தளவாசிகள் பதிவிட்டு வருகின்றனர் என்று பிரெஸ்மா அமைப்பின் தலைவர் டத்தோ ஜவஹர் அலி பத்திரிகை அறிக்கையில் கூறியுள்ளார்.
அந்த சூழ்நிலையில், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது அவதூறு வழக்கு நடவடிக்கை எடுப்பதற்கு தாம் வழக்கறிஞர்களுடன் விவாதித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார் என்று பேரா மாநில சுகாதார இலாகாவின் தூய்மைப் பாதுகாப்புக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் அச்சுலிங்கம் கூறியுள்ளார்.
அவதூறு வழக்கு என்பது உயிருடன் இருக்கும் தனி மனிதர் உயிரோடு இருக்கும் இன்னொரு மனிதர் மீது போடும் வழக்கு. காரணம் தனிநபரின் நற்பெயரைக் கெடுக்கும் தீய நோக்கத்துடன் அவதூறு வார்த்தகளை அல்லது செய்திகளை பரப்பினால் அது அவதூறு என்பதோடு சட்டப்படி குற்றமாகும். மாறாக நிறுவனத்தின் மீதோ அல்லது ஒரு பெரிய கும்பலுக்கு எதிராக அவதூறாகப் பேசியிருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. இது தான் அவதூறு வழக்கின் அடிப்படையாகும் என்றார்.
பேரா மாநிலத்தின் சுகாதாரத்திற்கு தலைமை ஏற்கும் பொறுப்பு ஆட்சிக்குழு சார்பில் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், உணவகங்களில் உணவு சுகாதாரம், தரம் மற்றும் உணவகத் தளத்தின் தூய்மை விவகாரம் தொடர்பில் பல இடங்களுக்கு சுகாதார அமலாக்கா அதிகாரிகளுடன் சென்று முறைப்படி திடீர் சோதனை நடத்தியுள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.
பயனீட்டாளர்கள் கொடுக்கும் புகாரின் அடிப்படையில் சோதனைக்கு உட்பட்டுள்ள அந்த உணவகங்கள் சுகாதார சட்டத்திற்கு எதிர்மறையாக வணிகத்தை நடத்தி வருவது கண்டு பிடிக்கப்படும் போது அந்த உணவகம் உடனடியாக 14 நாள்களுக்கு வியாபாரம் செய்யக்கூடாது என்று சீல் வைக்கப்படுகிறது.
உணவகத்தை முறைப்படி தூய்மை செய்தால் மீண்டும் குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகவே திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கும் கடிதம் கொடுக்கப்படுகிறது. அந்நிலையில், பேரா மாநிலத்தில் உள்ள உணவகங்களில் மாத்திரை கலப்படம் செய்கின்றனர் என்பதில் உண்மை கிடையாது என்றும் சிவநேசன் சுட்டிக்காட்டினார்.
அதே வேளையில், பயனீட்டாளர்களின் சுகாதார நலனைக் கருத்தில் கொண்டு உயர்தர உணவுகளை தயாரிப்பதில் முக்கிய கவனம் செலுத்தும் உணவகங்கள் பேரா மாநிலத்தில் உண்டு என்பதை மறுக்க முடியாது. ஒரு நாள்கூட விடுமுறை இல்லாமலும், 20 முதல் 24 மணி நேரம் வரையில் திறந்திருக்கும் உணவகங்கள் தான் சுகாதார தூய்மைக் கேட்டின் வரிசையில் முதலிடம் பெற்றுள்ளன.
மாநிலத்தின் சுகாதார பொறுப்பிலிருந்து பேசுவது என்னவெனில், இது போன்று பிரச்சினைகள் இருந்தால், அவர்கள் மாநில அரசு அலுவலக நேரத்தில் என்னை தாராளமாக சந்திக்கலாம். சந்தித்து எடுத்துச் சொல்லலாம் வாருங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், ஆட்டிறைச்சி உணவில் மாட்டிறைச்சியும், நாட்டாடு இறைச்சி உணவில் செம்மறியாட்டிறைச்சியும் இருந்தால் அது குற்றம். தெலுக் இந்தானில் சுகாதார அமைச்சு இங்குள்ள 4 இந்திய உணவக உரிமையாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட நீதிமன்ற வழக்கில் சுகாதார அமைச்சு தரப்பில் ஆட்டிறைச்சி உணவில் மாட்டிறைச்சி கலந்திருந்ததாக சோதனை ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டு வெற்றியும் அடைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
உணவு பாதுகாப்பு சட்டம் 1984 இன் கீழ், ஆட்டிறைச்சியில் மாட்டிறைச்சி கலந்திருந்தால் குற்றம். ஆனால், உணவில் மாத்திரைகளை கலப்படம் செய்கின்றனர் என்று கூறுவது எதிர்மறையான பேச்சு. உணவகங்களின் சுகாதார தூய்மைக்கு ஊராட்சி மன்ற நிர்வாகம் தனது சான்றிதழ் மூலம் A என்பது உயர்தர சுகாதார தரம். B என்பது மத்திய தரம் என்றும் C என்பது சாதாரண தரம் என்றும் வகுக்கப்பட்டுள்ளன.
இந்த 2024இன் அரையாண்டின் போது ஈப்போவில் உள்ள 24 மணிநேர உணவகங்களின் உணவு சுகாதாரம், தரம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் ஆட்சிக்குழு சார்பில் நானும் என்னுடன் ஈப்போ மாநகர் அமலாக்க அதிகாரிகள் மாநில சுகாதார இலாகாவின் அதிகாரிகளுடன் சேர்ந்து திடீர் சோதனை நடத்தினோம்.
அதில், 24 மணிநேர உணவகத்தின் செயல்பாடுகள் என்பது பயனீட்டாளர்களின் வெறுப்பை தூண்டும் அளவுக்கு துர்நாற்றத்தை நேரில் கண்டு அந்த உணவகத்தைச் சுத்தம் செய்வதற்கு 14 நாள்கள் வரை காலக்கெடுவில் சீல் வைக்கப்பட்டது என்றும் சிவநேசன் எடுத்துரைத்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



