தாய்லாந்திலிருந்து பன்றி இறைச்சியை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படலாம்!
- Muthu Kumar
- 09 Aug, 2025
கோலாலம்பூர், ஆக.9
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியது முதல், நாட்டில் பன்றி இறைச்சிக்கான விலை அதிகரித்திருப்பதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, தாய்லாந்தில் இருந்து பன்றி இறைச்சியை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டிருக்கும் தடையை அகற்றுவது குறித்து கால்நடைச் சேவை இலாகா பரிசீலித்து வருகிறது.
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து, ஆறு நாடுகளில் இருந்து பன்றி இறைச்சி சம்பந்தப்பட்ட உணவுப் பொருள்கள் இறக்குமதிக்கு மலேசியா கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தடை விதித்திருக்கிறது.
தாய்லாந்தைத் தவிர்த்து சீனா, போலந்து, பெல்ஜியம், வியட்னாம் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளில் இருந்து மலேசியா பன்றி இறைச்சியை இறக்குமதி செய்து வந்தது.
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் ஆபத்து குறித்த ஆய்வை கால்நடைச் சேவை இலாகா மறுமதிப்பீடு செய்திருப்பதாகவும் மலேசிய சந்தையினுள் நுழைய தாய்லாந்து பன்றி இறைச்சியை அனுமதிப்பது குறித்து அது பரிசீலித்து வருவதாகவும், விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமட் சாபு தெரிவித்தார்.
எனினும், இறக்குமதி செய்யப்படுவதற்கான தேவை மற்றும் கால்நடைச்சேவை இலாகாவினால் தணிக்கை செய்யப்பட்டு அங்கீகாரம் வழங்கப்படுவதைப் பொறுத்திருக்கிறது என்று, மக்களவையில் நேற்று ஓர் எழுத்துப்பூர்வமான பதிலில் முஹமட் தெரிவித்தார்.பக்காத்தான் ஹராப்பானின் ராசா நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் சா கீ சின் கேட்டிருந்த இதன் தொடர்பிலான ஒரு கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
கடந்த மே மாதத்தில், கிள்ளான் பள்ளத்தாக்கில் பன்றியின் வயிற்றுப் பகுதி இறைச்சி கிலோ ஒன்றுக்கு 40 வெள்ளியாக விற்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இதன் விலை 30 வெள்ளியாக இருந்ததாக, ஸ்டிரேட் டைம்ஸ் இதற்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில், தற்போது 100 கிலோ உள்ளூர் பன்றியின் விலை 1,800 வெள்ளியாக இருப்பதாகவும் ஓராண்டுக்கு முன்னர் அதன் விலை 1,300 வெள்ளியிலிருந்து 1,400 வெள்ளியாக இருந்ததாகவும் தி ஸ்டார் தெரிவித்திருந்தது.
பன்றிக் காய்ச்சல் பரவல், கால்நடைகளின் எண்ணிக்கையைப் பாதித்த பிறகு அவற்றின் விலைகள் உயர்ந்தன. பன்றிக் காய்ச்சல் காரணமாக சிலாங்கூரிலும் மலாக்காவிலும் ஆயிரக் கணக்கான பன்றிகள் கொல்லப்பட்டன. அதோடு, பினாங்கில் பன்றிப் பண்ணைகளின் எண்ணிக்கையும் 25 விழுக்காடு குறைந்திருக்கிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



