கோத்தா திங்கி – 6 மாணவர்களுக்கு TB

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, பிப் 6: கோத்தா திங்கி  மாவட்டத்தில் ஆறு மாணவர்களுக்கு காசநோய் (TB) உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் நெருங்கிய தொடர்பு (close contact) பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜொகூர் கல்வி மற்றும் தகவல் குழுத் தலைவர் அஸ்னான் தாமின் கூறுகையில், உறுதி செய்யப்பட்டவர்களில் நான்கு ஆண் மாணவர்களும் இரண்டு பெண் மாணவர்களும் அடங்குவர். அனைவரும் சுகாதார விதிமுறைகளின்படி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

இதுவரை எந்த பள்ளியையும் மூடுவதற்கான உத்தரவும் சுகாதார அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை என்றும், நோய் பரவல் கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு நெருங்கிய தொடர்புடையவர்களை பரிசோதனை செய்து, நோய் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று அவர் அறிக்கையில் கூறினார்.

மேலும், மாவட்ட சுகாதார அலுவலக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று, பள்ளி நிர்வாகத்துடன் கலந்துரையாடல் நடத்தி, காசநோய் குறித்த விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு விளக்கமளித்ததாகவும் அவர் கூறினார்.

பள்ளி சுத்தம் மற்றும் மாணவர்களின் உடல்நல கண்காணிப்பு உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அனைத்து வழிகாட்டுதல்களையும் பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உறுதி செய்யப்படாத தகவல்கள் அல்லது ஊகங்களை பொதுமக்கள் பரப்ப வேண்டாம் எனவும், அவை சமூகத்தில் அச்சம் மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் அஸ்னான் எச்சரிக்கை விடுத்தார்.

அதிகாரப்பூர்வ தகவல்களை சுகாதார அமைச்சின் அறிக்கைகள் அல்லது ஜொகூர்  மாநில அரசின் அதிகாரப்பூர்வ ஊடக வழிகளிலிருந்து மட்டுமே பெற வேண்டும்  என்றார்.

இதற்கிடையில், சுகாதார அமைச்சர் சூல்கெஃப்ளி அகமட் நேற்று கூறுகையில், இந்தக் காசநோய் குழு ஜனவரி 25 அன்று கண்டறியப்பட்டதாகவும், பிப்ரவரி 4 நிலவரப்படி 804 நெருங்கிய தொடர்புடையவர்களை பரிசோதித்ததில் 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *