கூட்டு பாலியல் பலாத்காரம் நான்கு மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 14-

மலாக்காவில் உள்ள ஒரு பள்ளியில் மூன்றாம் படிவ மாணவி ஒருவரிடம் கூட்டாகச் சேர்ந்து பாலியல் பலாத்காரம் புரிந்த நான்கு ஐந்தாம் படிவ மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.நேற்று திங்கள்கிழமை கூடிய, அலோர் காஜாவில் உள்ள சம்பந்தப்பட்ட பள்ளியின் கட்டொழுங்கு வாரியத்தினால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக, கல்வி தலைமை இயக்குநர் அஸாம் அஹ்மாட் தெரிவித்தார்.

வகுப்பறையில் தவறி விட்டுவிட்ட சில பள்ளி உபகரணப் பொருட்களை எடுப்பதற்காக அந்த 15 வயது மாணவி இம்மாதம் 2ஆம் தேதி பிற்பகல் 2.50 மணியளவில் மீண்டும் வகுப்பறைக்குச் சென்றபோது, அந்த நான்கு மாணவர்களும் அவரிடம் அத்தகைய செயலைப் புரிந்ததாகக் கூறப்பட்டது.அச்சம்பவத்தை இரண்டு மாணவர்கள் வெறுமனே பார்த்ததோடு, அதை தங்களின் கைத்தொலைபேசியில் பதிவு செய்ததாகவும் பின்னர் அது தொடர்பிலான ஒரு காணொளியை இணையத்தில் பகிர்ந்ததாகவும் கூறப்பட்டது.

கைதாகி இருக்கும் அந்த நான்கு மாணவர்களும் விசாரணைக்காக வரும் 16ஆம் தேதி வரையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.அடுத்த மாதம் தொடங்க விருக்கும் எஸ்பிஎம் தேர்வில் அமர அந்த நான்கு மாணவர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்த பின்னர், கல்வி அமைச்சுக்கு எதிராக
இணையதளவாசிகளிடம் இருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

பதினெட்டு வயதுக்குக் கீழ்ப்பட்ட அந்த நான்கு சந்தேகப்பேர்வழிகளும் நடவடிக்கையை எதிர்கொள்வதிலிருந்து விதிவிலக்கு பெற்றிருக்கவில்லை என்று, சட்டம் மற்றும் கழக சீர்திருத்தத்துறை அமைச்சர் அஸாலினா ஒஸ்மான் தெரிவித்தார்.கற்பழிப்பு ஒரு குற்றச் செயலாகும் என்றும் சம்பவம் நடந்தபோது குற்றம் இழைத்தவர்களின் வயதைப் பொறுத்து தனி நீதிமன்றங்களில் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அந்த மூன்று மாணவர்களும் தங்களின் கல்வியைத் தொடர அனுமதிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக போலீஸ் மற்றும் மாநில கல்வி இலாகாவுடன் கலந்து பேசப்பட்ட பின்னர் அவர்களை எஸ்பிஎம் தேர்வில் அமர அனுமதிப்பதென்று முடிவு செய்யப்பட்டதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் நேற்றுமுன்தினம் கூறியிருந்தார்.

'அம்மாணவர்கள் தங்களின் கல்வியில் பின்தங்கியிருக்கக் கூடாது என்பதை நாங்கள் உறுதி செய்வோம். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதை போலீசாரிடமே நாங்கள் விட்டு விடுகிறோம். "அதேவேளையில், பள்ளியில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கான ஒழுக்கம். பள்ளியின் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவு ஆகியவற்றை நாங்கள் நிர்வகிப்போம் என்று ஃபட்லினா கூறியதாக தெரிவிக்கப்பட்டது.

அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சையையும் “உணர்ச்சிப்பூர்வமான ஆதரவையும் பெற்று வருவதாகக் கூறிய அவர்,சம்பந்தப்பட்ட பள்ளியைச் சேர்ந்த இதர மாணவர்களை ஆதரிப்பதற்காக ஆலோசகர்கள் அடங்கிய ஒரு குழுவினர் அங்கு பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *