இந்தியாவை உலுக்கிய தந்தை, மகன் கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
- Muthu Kumar
- 24 Mar, 2026
இந்தியாவில் சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் 6 ஆண்டு விசாரணைக்கு பிறகு குற்றம் சுமத்தப்பட்ட காவலர்கள் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 19.6.2020 ஊரடங்கு விதிமுறைகளை மீறி தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததாக இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கி, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். 23.6.2020 கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வர்த்தக அமைப்பினர் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வழக்கை முதலில் சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டனர்.பின்னர் சிபிஐக்கு விசாரணை மாற்றப்பட்டது. இந்த வழக்கில் அப்போதைய சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்,எஸ்.ஐ ரகு கணேஷை உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் தலைமைக் காவலர் முத்துராஜ்,உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் சாமத்துரை, செல்லத்துரை, வெயிலுமுத்து, தாமஸ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைதானவர்களில் சிறப்புச் சார்பு ஆய்வாளர் பால்துரை உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 9 பேரும் தற்போது மதுரை சிறையில் உள்ளனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீஸ் ரேவதி, பியூலா, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சாட்சியம் அளித்தனர்
105 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ., இரண்டு கட்டமாக 2,427 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சம்பவம் நடந்து 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் வழக்கின் விசாரணை முடிவடையவில்லை. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, 3 மாதத்துக்குள் வழக்கை விசாரித்து முடிக்க மதுரை நீதிமன்றதுக்கு உத்தரவிட்டது.
சி.பி.ஐ. தரப்பு சாட்சிகள் 105 பேரிடமும் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துகுமாரன், தந்தை, மகன் இருவருக்கும் போலீஸ்காரர்களால் தான் காயங்கள் ஏற்பட்டுள்ளது என்பது ஊர்ஜிதம் ஆகிறது.இது கொலைதான் என தீர்மானிக்கப்படுகிறது . தந்தை மகன் இருவருக்கும் மரணத்தை விளைவிக்கும் காயங்கள் இருந்ததாக சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் உள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் இருந்த காயங்கள் இயற்கைக்கு மாறானது என்றார். மேலும் இவ்வழக்கில் 9 போலீசாரும் குற்றவாளிகள், இவர்களுக்கான தண்டனை விவரம் ஏப்ரல் 9 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தீர்ப்பு அளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



